ஜப்பானைக் கலக்கும் முதல்வர் ஸ்டாலின்.. புதிய ஒப்பந்தங்களில் பரபர கையெழுத்து!

Aadmika
May 26, 2023,10:53 AM IST

ஒசாகா : முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (மே 25) ஜப்பான் சென்றடைந்தார். அங்கு போன கையோடு ஜப்பான் உற்பத்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.


முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒன்பது நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மற்றும் அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்த பிறகு, தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




ஒசாகா விமான நிலையத்தில், ஜப்பானுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி ஸ்டாலினை வரவேற்றார். இன்று, தமிழக முதல்வர் முன்னிலையில் ஒசாகா மாகாணத்தில், தமிழக வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 


திருப்போரூரில் ரூ. 83 கோடி தொழிற்சாலை


திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை ரூ.83 கோடி முதலீட்டில், சுமார் 53 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யம் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


இந்த புதிய ஒப்பந்ததத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குநர் கென் பாண்டோ மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு கையெழுத்து நிகழ்வின் போது தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மற்றும் அரசு புயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். 


இதைத் தொடர்ந்து ஜப்பானில் இன்றும், நாளையும் (மே 26, 27) நடக்க உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.   அதன் பிறகு தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு அவர் சென்னை திரும்புவார்.