ஆதார் - பான் இணைக்காவிட்டால் கூடுதல் வரி.. நிர்மலா சீதாராமன் அதிரடி

Aadmika
Apr 06, 2023,03:57 PM IST
புதுடில்லி : நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் ஆதார் - பான் இணைக்கா விட்டால் முதலில் அபராதம் விதிக்கப்படும். அப்படியும் இணைக்காவிட்டால் கூடுதல் வரி வசூலிக்கப்படும். அப்படியும் இணைக்காவிட்டால் பான் கணக்கு முடக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆதார் எண்ணுடன், பான் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 2022 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை ஆதார் - பான் இணைப்பை இலவசமாக செய்ய முடிந்தது. அதற்கு பிறகு ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து ஆதார் - பான் இணைப்பிற்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஜூலை 01 ம் தேதிக்கு பிறகு அபராத தொகை ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. 



அப்போதும் ஆதார் - பான் இணைக்காதவர்களின் பான் கணக்கு 2023 ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதியுடன் முடக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எதற்காக இந்த அபராத தொகை என பலரும் கேட்டு வந்தனர். இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். 

அப்போது அவர் கூறுகையில், ஆதார் - பான் இணைப்பு கட்டாயம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இணைக்க வேண்டும் என முன்பே அறிவிக்கப்பட்டு, போதிய அவகாசமும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஆதார் - பான் இணைப்பு நடந்துள்ளது. கொடுக்கப்பட்ட அவகாச காலத்திற்குள் இணைக்காதவர்களுக்கு மட்டுமே இந்த அபராதத் தொகை. அப்படியும் இணைக்கவில்லை என்றால் அபராத தொகை அதிகப்படுத்தப்படும் என்றார்.

முன்னதாக மார்ச் 28 ம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தனி நபர்கள் ஆதார் எண்ணுடன் - பான் எண்ணை இணைப்பது கட்டாயம். அப்படி இணைக்காதவர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வரித்தொகை உயர்வது உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆதார் எண் வைத்திருக்கும் அனைவருக்கும் பான் பெற தகுதி உள்ளது என அறிவிக்கப்பட்டது. அனைத்து கணக்குகளையும் ஒரே எண்ணின் கீழ் கொண்டு வருவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஆதார் - பான் இணைப்பிற்கான கால அவகாசம் தற்போது 2023 ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்களின் பான் எண்கள் ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் ஜூலை மாதம் 1 ம் தேதியில் இருந்து அவர்களின் கணக்கு முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.