இனி இவங்க தான் "தலைவர்கள்".. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சரத் பவார்!

Aadmika
Jun 10, 2023,03:01 PM IST

டில்லி : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25வது ஆண்டு விழாவில் கட்சியின் புதிய செயல் தலைவர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் சரத் பவார். 

கடந்த மாதம் தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் அறிவித்தார். ஆனால் கட்சி தொண்டர்கள் போராட்டம் செய்ததால் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றார்.

1999 ம் ஆண்டு பி.ஏ.சங்கமா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவக்கினார். அவருக்கு பிறகு இக்கட்சியின் தலைவராக சரத் பவார் இருந்து வருகிறார். வயது முதிர்வின் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் சரத் பவார் அறிவித்தார். இதனாலேயே 2024 ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பிரதமர் போட்டியில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் அறிவித்தார்.



தற்போது கட்சியின் முக்கிய பொறுப்புக்களை அஜித் பவார் தான் கவனித்து வருகிறார். இந்நிலையில் இனி சுப்ரியா சுலேவும், பிரஃபுல் பட்டேலும் தான் கட்சியின் புதிய செயல் தலைவர்கள் என சரத் பவார் அறிவித்துள்ளார். ராஜ்யபா மற்றும் லோக்சபா தேர்தல் பணிகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு இவர்கள் இருவரும் தான் கவனிக்க உள்ளதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்குவதால் அதிக பொறுப்புக்களை அவர்களிடம் கொடுத்துள்ளதாகவும், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அடுத்து நடக்க உள்ள காலியாக உள்ள ராஜ்யசபா மற்றும் லோக்சபா பதவிகளுக்கான இடைத்தேர்தல் அமையும் என தேசிய வாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் 25 வது ஆண்டு விழாவில் பேசிய சரத்பவார், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டுமக்கள் நிச்சயம் உதவுவார்கள். வரும் 23 ம் தேதி நாங்கள் அனைவரும் பீகார் சந்தித்து, ஆலோசிக்க உள்ளோம். அதற்கு பிறகு நாடு முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளோம் என தெரிவித்தார்.