ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர்: பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுங்க.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Aadmika
Feb 03, 2023,04:30 PM IST
புதுடில்லி : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அதிமுக பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்து கொள்ள சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



ஜூலை மாதம் பொதுக்குழு கூட்டப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது உள்ளிட்ட அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் பிப்ரவரி 27 ம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ன விவகாரம் எழுந்தது. 

இதற்கிடையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரித்து தனது கையெழுத்தை ஏற்று, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு ஒன்ற தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்,  இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு உத்தரவிட்டது. 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில் மனுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட தயார். ஆனால் அதை ஈபிஎஸ் ஏற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பதில் மனுவில், இரட்டை இலை சின்னம் முடப்படவில்லை. இது பற்றி தங்களிடம் எந்த ரதப்பும் முறையிடவும் இல்லை. ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை. அது தேர்தல் கமிஷனின் வேலையும் இல்லை என கூறியது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதில், இரு அணிகளும் இணைந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். ஜூலை 11 ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களையும் சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும். கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுகுழுவிற்கு பொருந்தாது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவைத் தலைவரால் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும்.

பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்திடுவது குறித்து ஓபிஎஸ் முடிவெடுக்கலாம். இந்த உத்தரவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படாது. வேட்பாளராக தேர்வு செய்யப்படுபவர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி போட்டியிடலாம். தற்போது அதிமுக உள்விவகாரங்கள் தொடர்பான பல மனுக்கள் நிலுவையில் உள்ளதால் உறுதி எதுவும் தற்போது எடுக்க முடியாது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 07 ம் தேதி கடைசி நாள் என்பதால் எங்களை உடனடியாக முடிவு எடுக்க நிர்பந்திக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.