"அண்ணாமலைன்னா யாரு.. தமிழ்நாட்டில் பாஜக இருக்கா?".. சுப்பிரமணியம் சாமி குசும்பு!

Su.tha Arivalagan
Jul 06, 2023,01:49 PM IST
மதுரை: அண்ணாமலைன்னா யாரு என்று செய்தியாளர்களிடம் சுப்பிரமணியம் சாமி கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

பாஜகவிலேயே இருந்து கொண்டு பாஜக மூத்த தலைவர்களை குறிப்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என ஒருவர் விடாமல் கடுமையாக விமர்சித்து வருபவர் சுப்பிரமணியம் சாமி.

சமீபத்தில் கூட மணிப்பூர் விவகாரமாக  கருத்து தெரிவித்திருந்த அவர், அமித் ஷாவை பேசாமல விளையாட்டுத்துறை அமைச்சராக்கி விடலாம் என்று காட்டமாக கூறியிருந்தார். அதேபோல பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜகவை சீண்டி அவர் பேசியுள்ளார். மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழ்நாட்டின் சிங்கம் என்று அண்ணாமலையை சொல்கிறார்கள்.. அதுகுறித்து உங்க கருத்து என்ன என்று கேட்டனர். அதைக் கேட்ட சுப்பிரமணியம் சாமி கொஞ்சம் கூட யோசிக்காமல், அண்ணாமலைன்னா யாரு என்று கேட்டபடி நகர்ந்தார்.

உடனே செய்தியாளர்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் என்று எடுத்துக் கொடுக்க, அதையும் விடாத சாமி, தமிழ்நாட்டில் பாஜக இருக்கா.. எனக்குத் தெரியாதே என்று மேலும் நக்கலடித்தார். பாஜகவுக்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கார்களே என்று அந்த செய்தியாளர் விடாமல் சாமியை பிடிக்க, சாமியோ, நான் கவனித்ததில்லை.  கட்சி இருக்கான்னே எனக்குத் தெரியலை.. இதுல இவர்களை எப்படி எனக்குத் தெரியும் என்று விடாக் கொண்டன் கொடாக் கண்டனாக பதிலளித்தபடி நகர்ந்து சென்றார்.

சாமி இப்படி அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜகவை வாரியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் கடுமையாக சாமியை திட்டி விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த பயணத்தால் என்ன லாபம் கிடைத்தது.. மோடி அங்கிருந்து என்ன கொண்டு வந்தார். மணிப்பூர் விவகாரத்தை விட அமெரிக்கா பயணம் முக்கியமா என்று கேட்டார். மேலும் பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு, அது அவசியமானது. காங்கிரஸ் என்னதான் எதிர்த்தாலும் இது நிச்சயம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இது சர்தார் வல்லபாய் படேல் பரிந்துரைத்த சட்டம். இது அவசியமானது எ��்றார் சாமி.