ஒரு வழியாக கேரளாவிற்கு வந்தது தென்மேற்கு பருவ மழை!

Aadmika
Jun 08, 2023,03:21 PM IST
டில்லி : கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதமாக பருவமழை துவங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைபர்ஜோய் புயல், பருவமழையின் தீவிரத்தை பாதித்து வருவதாகவும், இந்த தாக்கம் காரணமாக கேரளாவில் மழையின் தீவிரம் குறையும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறி வந்தனர். இந்நிலையில், இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 08 ம் தேதியான இன்று தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.



அதே சமயம் தெற்கு அரபிக் கடல் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, லட்சத்தீவு, கேரளாவின் பெரும்பாலான பகுதிகள், தமிழகம், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் முன்கூட்டியே பருவமழை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜூன் 04 ம் தேதி துவங்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அதை விடவும் தாமதமாக ஜூன் 08 ம் தேதி துவங்கி உள்ளது. 

கடந்த 150 வருடங்களாக கேரளாவில் பருவமழை துவங்கும் தேதி மிகவும் மாறுபட்டு வருகிறது. 1918 ம் ஆண்டுகளில் மே 11 ம் தேதிக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை துவங்கி கேரளா முழுவதும் பரவலாக பெய்ய துவங்கியது. 1972 ம் ஆண்டு முதல் ஜூன் 18 என்ற அளவில் தாமதமாகவே பருவமழை துவங்கி வருவதாக வானிலை மைய புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டு மே 29 ம் தேதியும், 2021 ல் ஜூன் 3 ம் தேதியும், 2020 ல் ஜூன் 01 ம் தேதியும், 2019 ல் ஜூன் 8 ம் தேதியும், 2018 ல் மே 29 ம் தேதியும் பருவமழை துவங்கியது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி உள்ளதால் வடமேற்கு பருவமழையும்  தாமதமாகும் என சொல்ல முடியாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தாமதமாக துவங்கி உள்ள பருவமழை, மழை அளவில் எந்த பாதிப்பையையும் ஏற்படுத்தாது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் சராசரி என்ற அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வடமேற்கு பருவமழை சற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.