ஏகே 62 டைரக்டர் அவரும் இல்ல இவரும் இல்லையா?...விக்னேஷ் சிவன் நிலைமை இப்படியா ஆகணும்?

Aadmika
Jan 30, 2023,02:26 PM IST
சென்னை : அஜீத்குமாரின் 62வது படத்தை இயக்கப் போவது விக்னேஷ் சிவன் இல்லை என்ற தகவலால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.



டைரக்டர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் கூட்டணி அமைத்து, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு என வரிசையாக 3 ஹிட் படங்களில் நடித்தார் அஜித். துணிவு படத்தை கொண்டாடி முடித்த ரசிகர்கள் அடுத்து ஏகே 62 அப்டேட்கள் பற்றி கேட்க துவங்கி விட்டனர். ஏகே 62 மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதால் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் ஏகே 62 ஹெஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அஜித்தின் 62 வது படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாகவும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும், லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கதாகவும் லைகா நிறுவனம் பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதற்கு பிறகு அது பற்றிய அப்டேட் எதுவும் இல்லை. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால் கடுப்பான அஜித், ஏகே 62 படத்தின் கதை உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றம் செய்ய சொன்னதாக தகவல் கோலிவுட்டில் பரவி வந்தது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் டைரக்டர் விஷ்ணுவர்த்தன் தான் ஏகே 62 படத்தை இயக்க போவதாக முதலில் தகவல் வந்தது.

இப்போது அதுவும் இல்லையாம். தடம் உள்ளிட்ட தனித்துவமான க்ரைம், ஆக்ஷன் படங்களை இயக்கி டைரக்டர் மகிழ் திருமேனியிடம் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் பெரிய நடிகர் ஒருவரை வைத்து மகிழ் திருமேனி இயக்கும் முதல் படம் இதுவாக தான் இருக்கும். 

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஏகே 62 படத்திற்கு பதிலாக ஏகே 63 படத்தை தான் விக்னேஷ் சிவன் இயக்க போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என பரவும் தகவல் பற்றி விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்தோ அல்லது லைகா தரப்பில் இருந்தோ இதுவரை எந்த விளக்கமோ, மறுப்போ, அப்டேட்டோ வெளியிடப்படவில்லை. இதனால் வெளியான தகவல் உண்மை தானோ என பலரும் கேட்டு வருகின்றனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களால், தங்கள் படத்தை இயக்கும் பொறுப்பை விக்னேஷ் சிவனிடம் ஒப்படைக்க பெரிய ரசிகர்கள் பலரும் தயக்கம் காட்டி வருவதாகவும் கோலிவுட்டில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.