"எழுதுங்கள் என் கல்லறையில்"... இரும்பால் அடிக்கும் இன்னொரு குரல்.. இன்னும் கிடைக்கலியே!
Jun 10, 2023,04:57 PM IST
- பிரேமா சுந்தரம்
சில முகங்களை போன்று சில குரல்களும் நம் நினைவில் நீங்கா பதிவு பெற்றிருக்கும்.. அப்படிப்பட்ட நான் கடந்து வந்த ஏன் நீங்களும் கடந்து வந்த சில குரல்களைப் பற்றிதான் எழுத விழைகிறேன்..
"அம்மா.. எப்படி சிவாஜி கணேசன் இவ்வளோ அழகா பாடுறாங்க??" என கேட்ட எனக்கு கிடைத்த பதில் .. பாடுவது டி.எம்.சௌந்தரராஜன் என்ற பாடகர்.. சிவாஜி தாத்தா வாய்தான் அசைக்கிறார்.. "இன்றும் அம்மம்மா தம்பி உன்னை நம்பி அவன் என்னை வளர்த்தான்" என்ற ராஜபார்ட் ரங்கதுரை பாட்டுக்கும் "எழுதுங்கள் என் கல்லறையில் இவள் இரக்கமில்லாதவள் என்று; பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரனென்று" என்ற வசந்தமாளிகை பாட்டுக்கும் ஒலிக்கும் கணீர் குரலை இரும்பால் அடிக்கும் இன்னொரு குரல் கிடைக்கப்பெறவில்லை..!
பி.சுசீலா, ஜானகி, சித்ரா போன்ற பாடகிகள் நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்.. அதே மாதிரியான ஒரு வரம் கிடைக்கவும் பெற்று அதை முழுமையும் அனுபவிப்பதற்குள் கடவுள் பறித்துக் கொண்ட குரல்தான் சொர்ணலதா.. "மாலையில் யாரோ மனதோடு பேச" என நம் மனதோடு பேசியவர்.. "எந்தன் சோகம் சொல்வதற்கு இது போல் மருந்து வேறில்லையே" என்று அலைபாயுதே பாடலால் நம் சோகத்திற்கு குரலால் மருந்திட்டவர்.. !
"ஒரு கூட்டுக் கிளியாக ஒரு கூட்டுக் குயிலாக பாடு பண்பாடு" என படிக்காதவனில் பாடிய மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு முதல் மரியாதை திரைப்படமே முழுமுதற் சான்று..!
"கோதாவரி அடியேய் கோதாவரி" என ஒரு விதமான மங்கிய குரலில் சம்சாரம் அது மின்சாரம் இல் குடும்பக் காவியம் படைத்த திரு.விசு அவர்களின் குரலைக் கண்ணை மூடி கேட்டாலும் கூட கண்டு பிடித்து விடலாம்..
அரிய பல சாதனைகள் புரிந்த நம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அவர்களின் மெல்லிய குரலை நம் யாராலும் மறக்க முடியாது..
"தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன்" என்ற கலைஞரின் குரலும் ஒரு தனிவகை தான்..
லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இலங்கை வானொலி நிகழ்ச்சியாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள் பேசும் போது ஒரு ராஜகம்பீரம் வெளிப்படும்.
"வணக்கம் இன்றைய தலைப்புச் செய்திகள்" என செய்தி கூறும் நிர்மலா பெரியசாமி அவர்கள் எங்கள் குழந்தைப் பருவத்து குதூகலக் குரல்..
முகமறியா குரல்கள் பல நம் விழிகளை விரிய வைத்த காலம் உண்டு.. "நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" என்ற குரல், "பொம்மாயி" என்ற அருந்ததி திரைப்படக் குரல்.. "எனக்கொரு உண்மை தெரியனும் சாமி" என்ற முதல் மரியாதை குரல்.. "and the nominees are" என அனைத்து தமிழ் திரைப்பட விருது விழாக்களிலும் ஒலிக்கின்ற ஒரு குரல்..
"ஏந்திரு அஞ்சலி ஏந்திரு" என அஞ்சலி திரைப்படத்தில் ஒரு குழந்தை அழைக்கும் குரல் இன்றளவும் மனதில் அதே வலியோடு ஒலிக்கின்றது..
சூரியன் பண்பலையின் "கிட்டு மாமா சுசி மாமி"இன் குரலும் காலைப் பொழுதை அழகாக்கிய குரல்கள்..
"அய்யோ நான் கொடுத்த பாலெல்லாம் இப்படி இரத்தமாபோகுதே" என தேவர்மகனில் கதறி அழும் கிழவியின் குரலுக்கு மனம் குமுறாத இதயங்கள் இருக்க முடியாது..