தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம்
சென்னை : தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷிவ்தாஸ் மீனா சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகள் என பல மொழிகள் தெரிந்த இவர் 1989 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
காஞ்சிபுரத்தில் சப் கலெக்டராக பயிற்சியை துவங்கிய இவர் கோவில்பட்டி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி சப் கலெக்டர், கூடுதல் கலெக்டர், கலெக்டர் என படிப்படியாக உயர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணியாற்றி உள்ளார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்ட இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.