"சித்தராமே கெளடா சித்தராமையா எனும் நான்".. கர்நாடக முதல்வரானார் சித்தராமையா

Su.tha Arivalagan
May 20, 2023,01:16 PM IST
பெங்களூரு:  கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இன்று சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் பதவியேற்பைத் தொடர்ந்து துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து எட்டு அமைச்சர்கள் பதவியேற்றனர். முதல் அமைச்சராக ஜி. பரமேஸ்வரா பதவியேற்றார். அவரைத்  தொடர்ந்து கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி பாட்டீல், சதீஷ் ஜார்கிகோலி, பிரியஙக் கார்கே, ராமலிங்கா ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.



பெங்களூர் கான்டீரவா ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூனகார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சீதாராம் எச்சூரி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பீகார்  முதல்வர் நிதீஷ் குமார், ஜம்மு காஷ்மீர் மக்கள் கட்சித் தலைவர் மகபூபா முப்தி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்  உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



2வது முறை முதல்வர்

சித்தராமையா 2013ம் ஆண்டு முதல் முறை முதல்வரான போது இதே கான்டீரவா ஸ்டேடியத்தில்தான் பதவியேற்பு விழா நடைபெற்றது. இப்போது 2வது முறையாக பதவியேற்கும்போது அதே மைதானத்தில்தான் நடைபெற்றுள்ளது. 75 வயதாகும் சித்தரமையாவுடன் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்கு 61 வயதாகிறது.

2 முறை துணை முதல்வராகப் பதவி வகித்துள்ள சித்தராமையா, பலமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பல முக்கியப் பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். மீண்டும் முதல்வராகியுள்ள சித்தராமையாவுக்கு பல்வேறு மாநில முதல்வர்களும், தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.