"இப்படிச் சொன்னது நீங்கள் மட்டும் தான்".. சிலிர்த்துப் போன ஷோபனா ரவி!

Su.tha Arivalagan
Jun 29, 2023,01:04 PM IST
சென்னை: முன்னாள் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நெல்லை அருகே உள்ள கோவிலில் கண்ட காட்சிகள் குறித்து விவரித்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

ஷோபனா ரவியைத் தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. அழுத்தம் திருத்தமான இவரது உச்சரிப்பும், செய்தி வாசிப்பின்போது காட்டும் மிடுக்கும் இன்றும் மறக்க முடியாதவை. இப்போது ஓய்வு பெற்று விட்ட ஷோபனா ரவி சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார்.



தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கோவில் குறித்து விவரித்துள்ளார் ஷோபனா ரவி..  இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்:

திருநெல்வேலியருகே க்ருஷ்ணபுரம் கோயில். உள்ளே நுழையும்போது வலதுபக்கமிருந்த கல்வெட்டு கண்ணில்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பெயரும் ஓர் இஸ்லாமியர் பெயரும் பொறிக்கப்பட்டு இவர்களுடைய ஆசியோடு கோயிலுக்கு ஏதோ புனருத்தாரணம் செய்யப்பட்டதாக அந்தக் கல்வெட்டு தெரிவித்தது. 

தீர்க்கமான நாசியும் விதவிதமான அணிகலன்களுமாகக் காட்சிதந்த சிற்பங்கள் நாயக்க மன்னராட்சியின் போது இருந்த சமூகப் பழக்க வழக்கங்களைச் சித்தரித்தன.தூண் ஒன்றில் தலைவிக்கு ஒருத்தி வெற்றிலை மடித்து நீட்ட இன்னொருத்தி அதை உமிழக் குவளை ஏந்திப் பின்புறம் நின்றாள்.  இன்னொரு தூணில் கொடுவாள் மீசைக் குறவனொருவன் இளவரசியைக் கவர்ந்துபோகிறான்!  

குறத்தி மட்டும் சளைத்தவளா என்ன! அவளும் ஏதோ இளவரசனைத் தோளில் வைத்துக் கடத்திப் போகிறாள் வேறொரு தூணில்! எதிரெதிர் தூண்களில் மன்மதனும் ரதியும் ஒயிலாக நிற்கின்றனர். மன்மதன் கையில் கரும்பு வில்லும் மலரம்பும்! ஒருதூணில் பாலகிருஷ்ணன் தவழ்கிறான். இன்னொரு தூணில் அகஸ்தியர் யாரையோ காப்பாற்ற முனைகிறார். சிற்பங்கள் தூண்களிலிருந்து புடைத்துக் கொண்டிருக்காமல் முழுமையாக இடைவெளியோடு இருக்கின்றன. நெடிதுயர்ந்த தூணும் ஆஜானுபாஹுவான சிற்பமும் ஒரே கல்லில் செதுக்கியவை என்பதற்கு சாட்சியாக சில இடங்களில் தூணிலிருந்து நீளும் கருங்கல்  சிற்பத்தை இணைக்கிறது. 



சிற்பி இவற்றுக்குக் கண்திறந்திருந்தால் இந்தச் சிற்பங்கள் எட்டடி உயரத்துக்கு தர்மபுத்திரனும் அர்ச்சுனனுமாக எழுந்து நடந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. பாம்படமும் அபாரமான அணிகலன்களுமாக நின்ற த்வாரபாலகரைக் கடந்து உள்ளே சென்றோம்! இது வரை தான் 12 ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலம். உள்ளேயோ எட்டாம் நூற்றாண்டு கர்ப்பக்ருஹம்.  

வெங்கடேசப் பெருமாள் இரண்டாம் கட்டிலிருந்து எளிமையாக எங்களை பார்த்துக் கொண்டிருந்தார். 1400 வருடங்களுக்கு முன்னர் இருந்த மனோநிலையிலேயே இருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது! அணுகமுடியாத தூரத்தில் தெரிந்தார். முன்கட்டிலோ முழுப் பரிவாரத்தோடு உற்சவ மூர்த்தி ஜில்லென்று கொலுவீற்றிருந்தார். உள்ளே பிரகாரத்தைச் சுற்றமுடியாததால் வெளியே வந்து சுற்றலானேன்! 

மாலை நேரம். கீச்சுக் கீச்சென்று கிளிகள். இருபுறமும் பசுமையாக மரங்கள். போகப்போக நிறையக் கல்தூண்களோடு அழகிய சன்னிதி. அலமேலு மங்கை என்று எழுதப்பட்டிருந்தது. என் மனம் தாயார் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டது.  சன்னிதியில் தாயாரைத் தவிர வேறு யாருமே இல்லை. ஏன் இவ்வளவு தனிமை! குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. இருட்டும் வேளை. சற்று நேரத்தில் கிளிகளும் கூடடங்கி விடும். ஏம்மா இவ்வளவு 'lonely' யா இருக்கே என்று அவளிடம் கேட்டேன். பதிலை அனுமானித்தேன். 

அவளைச்சுற்றி வந்து தொடர்ந்து நடந்தேன். கோயில் வளாகத்தின் மறுபகுதியில் இன்னொரு சன்னிதி. பத்மாவதி. இவரும் தனியாகப் பேச்சுத் துணை இல்லாத சீனியர் citizen போல் நின்றிருந்தார். சீராகக் கல்பாவப்பட்டிருந்த அழகிய பாதையில் தொடர்ந்து நடந்து முன்வாசலை அடைந்தேன். கோயில் அர்ச்சகர் அங்கே நின்றிருந்தார். தாயாரின் தனிமை பற்றி அவரிடம் சொன்னபோது, " இப்படிச் சொன்னது நீங்கள் மட்டும் தான்," என்று சிரித்தார். உற்சவ மூர்த்திகளை அங்கே வைத்தால் திருட்டுப் போகிறது. அதனால் அங்கே வேறு எந்தச் சிலையையும் வைப்பதில்லை என்று விளக்கினார்.

நானும் ரவியும் அங்கிருந்து கிளம்பினோம். காருக்கு வருவதற்குள் கிளிகளின் சத்தம் அடங்கிப் போயிற்று.