என்னாச்சு செந்தில் பாலாஜிக்கு.. "மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்".. ஸ்டாலின் ஆவேசம்!

Su.tha Arivalagan
Jun 14, 2023,11:06 AM IST
சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விதம், அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு, அமலாக்கப் பிரிவின் அதிரடி ரெய்டுகள் அடுத்தடுத்து பரபரப்பையும், பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளின் இறுதியில் நேற்று இரவுக்கு மேல் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கப் பிரிவ அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.



அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுதுள்ளார் செந்தில் பாலாஜி. இதனால் அதிர்ச்சி அடைந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் செந்தில் பாலாஜியை உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். அவரது இசிஜி சீராக இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. 

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியதும் திமுக தலைவர்கள், அமைச்சர்கள், வக்கீல்கள், தொண்டர்கள் என பலரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் குவிந்தனர். இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று செந்தில் பாலாஜியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? 

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.  2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கடுமையாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பாஜக தலைவர்கள் கண்டனம்

இதற்கிடையே செந்தில் பாலாஜி நெஞ்சு வலி நாடகமாடுவதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நாடகத்தை யாரும் நம்ப மாட்டார்கள். சட்டப்படியே நடவடிடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.



இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டிவீட்டில்,  திரைக்கதை, வசனம்,  நடிப்பு சுமார் தான்.   "அய்யோ அய்யய்யோ.. கொலை பண்ணுறாங்க…" என்ற காட்சி இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்வது தான் நல்லது. இல்லையேல்  திமுக வின் மானம் சந்தி சிரிக்கும். அ.ராசா,  கனிமொழி ஆகியோரின் கைதுகளின் போது கூட இவ்வளவு அலப்பறை இருக்கவில்லை.ஆனால், இப்போது திமுக நடத்தும் நாடகம் வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

அகில இந்திய தலைவர்கள் கண்டனம்

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்திற்கு அகில இந்திய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இதுகுறித்துக் கூறுகையில்,  இது அரசியல் துன்புறுத்தல் என்பதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. எந்த விதமான முறையும் இல்லாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.



தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சூலே கூறுகையில்,  இவர்கள் இப்படிச் செய்யாவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். சிபிஐ, அமலாக்கப் பிரிவு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவோரில் 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான். புள்ளிவிவரத்தைப் பார்த்தாலே அது தெரியும்.. எனவே இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்த நடவடிக்கையை தேசியவாத காங்கிரஸ் கண்டிக்கிறது என்றார்.

திமுகவினர் போராட்டம்

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து திமுகவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். கரூரில் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. அவருக்கு மத்திய மருத்துவ டாக்டர்களை வைத்து பரிசோதனை நடத்திய பின்னர் அமலாக்கப் பிரிவு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தால் இங்கேயே தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படலாம். அவர் நன்றாக இருப்பதாக தெரிய வந்தால் அவரை டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லவும் அமலாக்கப் பிரிவு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.