செந்தில் பாலாஜி கைது: சட்டவிரோதம் - நீதிபதி நிஷா.. சரியே என நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு!

Su.tha Arivalagan
Jul 04, 2023,11:11 AM IST

சென்னை:  அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதமானது, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா தீர்ப்பளித்த நிலையில், அவரது கைது சரியான நடவடிக்கையே என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து 3வது நீதிபதி விசாரணைக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நெஞ்சு வலி வந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.




இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.


இந்த வழக்கு விசாரணையின்போது அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதமானது. எந்தவிதமான நடைமுறைகளையும் அது கடைப்பிடிக்கவில்லை என்று  செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டிருந்தது. அமலாக்கத்துறை சார்பில் தங்களது நடவடிக்கையை நியாயப்படுத்தியும், செந்தில் பாலாஜி தரப்பு ஒத்துழைப்பு தர மறுத்ததால்தான் வேறு வழியின்றி கைது செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.


இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது, உடனடியாக செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு நேர் மாறாக, கைது நடவடிக்கை சரியானதே என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் கூறியிருந்தார்.


இரு நீதிபதிகளும் முரணான தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.