நாடாளுமன்றத்தில் மீண்டும் செங்கோல்.. தமிழ்நாட்டுக்குக் கெளரவம்!
May 24, 2023,03:09 PM IST
டெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் செங்கோல் இடம் பெறவுள்ளது. லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது இந்த செங்கோல். நாடு சுதந்திரமடைந்தபோது மெளன்ட் பேட்டன் பிரபுவிடம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது. அதை அவர் ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டது.
இந்த செங்கோல் பின்னர் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இதை மியூசியத்திற்கு இடமாற்றி விட்டனர். தற்போது இது மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பவுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் இந்த செங்கோல் வைக்கப்படும்.
செங்கோலின் கதை
இந்தியா சுதந்திரமடைந்தபோது ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க என்ன மாதிரியான நடைமுறையைக் கையாளுவது என்று அப்போதைய வைஸ்ராய் மெளன்ட் பேட்டன் பிரபு பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கேட்டார். அவருக்கு சட்டென்று என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. காரணம் அப்படி ஒரு நடைமுறைய அப்போது யாரும் பார்த்ததில்லை என்பதால். இதையடுத்து இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியிடம் இதுகுறித்து நேரு கேட்டார்.
நேருவிடம், தமிழ்நாட்டு பாரம்பரியம் ஒன்றை எடுத்துக் கூறினார் ராஜாஜி. மன்னர்கள் ஆட்சியைப் பிடித்து ஆட்சிக் கட்டிலில் அமரும்போது அவர்களிடம் செங்கோல் வழங்கப்படும். அதைக் கொண்டு செம்மையான முறையில் மக்களுக்காக ஆட்சி புரிய வேண்டும் என்பது அதன் அர்த்தமாகும். நாமும் அது போல செய்யலாமே என்று நேருவிடம் கூறினார் ராஜாஜி. சோழர் காலத்து நடைமுறைகளையும் அவர் விவரித்தார். இது நன்றாக இருக்கிறதே என்று யோசித்த நேரு, செங்கோல் செய்ய வேண்டும் என்று ராஜாஜியிடம் கேட்டுக் கொண்டார்.
செங்கோலை எங்கு போய் செய்வது என்று குழம்பிப் போன ராஜாஜி, நேராக திருவாவடுதுறை ஆதீனத்தை அணுகினார். அவரிடம் செங்கோல் விஷயத்தைக் கூற ஆதீனமே செங்கோலைச் செய்து தரும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து அப்போது சென்னை மாகாணத்தில் மிகவும் பிரபலமான உம்மி பங்காரு ஷெட்டி நகைக் கடை நிறுவனத்தாரிடம் இந்த செங்கோல் செய்யும் பணியை ஆதீனம் ஒப்படைத்தார். அவரக்ளும் மிகவும் சிரத்தை எடுத்து சுத்தமான பொன்னால் ஆன செங்கோலைத் தயார் செய்தனர்.
உச்சியில் நந்தி சிலையுடன் கூடிய 5 அடி உயர செங்கோல் கம்பீரமாக தயாரானது. இதையடுத்து ஆதீனத்திலிருந்து ஒரு பிரதிநிதி இந்த செங்கோலுடன் டெல்லி சென்றார். அவர் இந்த செங்கோலை மெளன்ட் பேட்டனிடம் ஒப்படைத்தார். அவர் அதை நேருவிடம் வழங்கினார். ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்த செங்கோல் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது.