அப்பாடா.. இனி வெயில் வெளுக்காது.. மழை வரப் போகுது.. வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!
சென்னை: சென்னையையும், வட மாவட்டங்களையும் விட்டு வெளுத்து வந்த கடுமையான வெப்பம் குறைந்து விட்டதாம். இனி மழை வரப் போகிறது என்ற சந்தோஷமான செய்தியை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு கோடைகாலத்தை சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. 2019ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் கடுமையான வெயிலை இந்த ஜூன் மாதம் கண்டது சென்னை.
கடந்த 2012ம் ஆண்டு மொத்தம் 20 நாட்களுக்கு சென்னையில் 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி மக்களை வாட்டி எடுத்தது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு எல் நினோ காலகட்டம் நிலவியதால் அந்த ஆண்டு ஜூன் மாதமும் 20 நாட்களுக்கு வெயில் 41.5 டிகிரி அளவில் பதிவானது.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் மிகக் கடுமையான வெயிலை சென்னை சந்தித்தது. மொத்தம் 18 நாட்களுக்கு சென்னையில் 42.3 டிகிரி செல்சியஸ் வெயில் வெளுத்தெடுத்தது. இந்த அளவுக்கு வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். வெளியில் போக முடியவில்லை. வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. ராத்திரியெல்லாம் புழுக்கமும் தாங்க முடியவில்லை. மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் இந்த கொடுமையான வெயில் தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும், இனி இந்த அளவுக்கு வெயில் இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை நகரை வாட்டி வதைத்து வந்த வெப்ப அலைகள் முடிவுக்கு வந்து விட்டன. சென்ன நகருக்குள் மேகக் கூட்டங்கள் நுழைய ஆரம்பித்துள்ளன. இனி அனைவரும் எதிர்பார்த்த மழை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெய்யத் தொடங்கும்.
வேலூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பிக்கும். தற்போது காவிரி டெல்டா பகுதிகளிலும், கேரளாவிலும் தென் மேற்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. வால்பாறை, நீலகிரி, கர்நாடகா, கோவாவிலும் 24, 25ம் தேதிகளில் மழை பெய்ய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.