ஸ்கூல் டீச்சர் வேலையை உதறி விட்டு.. பஞ்சாயத்து தலைவியான சனா கானம்..உ.பியில் கலகல!

Su.tha Arivalagan
May 17, 2023,09:12 AM IST
ராம்பூர், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள ராம்பூர் பாலிகா பரிஷத் சபைக்கு ஒரு பள்ளிக்கூட ஆசிரியை பஞ்சாயத்துத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் சனா கானம். இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் டீச்சராக  இருந்து வந்தார். ஆனால்  தற்போது அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவியாகி விட்டார்.

சனா கானமின் கணவர் பெயர் மாமூன் ஷா.  ஏப்ரல் 15ம் தேதிதான் இவர்களது திருமணம் நடந்தது. அடுத்த நாளே தனது மனைவியை பஞ்சாயத்துத் தலைவி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுமாறு கணவர் மாமூன் ஷா கேட்டுக் கொண்டார். அதிர்ச்சி  அடந்த சனா கானம், முதலில் மறுத்தார். ஆனால் கணவரின் அன்புக் கட்டளையை தட்ட முடியாமல் ஏற்றுக் கொண்டு போட்டியிட்டார்.



இந்த பஞ்சாயத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்துள்ளார் மாமூன் ஷா. அப்போது அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வந்தார். தற்போது இவர் ஆம் ஆத்மி கட்சிக்கு மாறி விட்டார். இந்த முறை இந்த பகுதி பெண்களுக்கான பஞ்சாயத்தாக மாறி விட்டது. இதனால் மாமூன் ஷா போட்டியிட முடியவில்லை. இதனால் தனது மனைவியை நிறுத்தினார்.

மாமூன் ஷாவுக்கு பஞ்சாயத்தில் நல்ல பெயர் உண்டு. பல வருடமாக இங்கு மக்கள் பணியாற்றி வருவதால், அவரது மனைவிக்கு  அமோக ஆதரவளித்து மக்கள் தலைவியாக அவரைத் தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சனா கூறுகையில், என்னால் இதை நம்பவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் எனது கணவர்தான் காரணம். அவர் துணையாக இருந்ததால்தான் இதை சாதிக்க முடிந்தது. பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களின் பிரச்சினைகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும், செய்வேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர்.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாயத்து இது. மேலும் சமாஜ்வாடிக் கட்சியின் முக்கியத் தலைவரான அஸம் கானின் கோட்டையும் கூட. அப்படிப்பட்ட இடத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில்  போட்டியிட்டு கானம் வெற்றி பெற்றுள்ளார். இங்கு பாஜகவுக்கு 2வது இடம் கிடைத்தது. சமாஜ்வாடிக் கட்சி 3வது இடத்தையே பிடித்தது.