பாரத போரை நிறுத்த சகாதேவன் கொடுத்த ஐடியா.. அசந்து போன கிருஷ்ணர்

Aadmika
Jan 06, 2023,09:08 AM IST

சென்னை: மகாபாரத போரை நடக்க விடாமல் எப்படி தவிர்க்கலாம், போரை நிறுத்துவதற்கு என்னவெல்லாம் வழிகள் உண்டு என கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்கள் ஒரு ஆலோசனை நடத்தினர். நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியும் ஒரு யோசனையும் கிடைக்கவில்லை. கிருஷ்ணரை தூதாக அனுப்பிய முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதே, போரை தவிர்க்க வேறு என்ன செய்யலாம் என பாண்டவர்கள் கூடாரம் ஒன்றில் யோசித்துக் கொண்டிருந்தனர்.


சிறிது நேரத்திற்கு பிறகு கண்ணனும், சகாதேவனும் மட்டும் வெளியே சென்றனர். அப்போது, " போரை நிறுத்துவது என்ன அவ்வளவு கடினமான காரியமா? இதற்கு ஏன் இத்தனை யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள் கிருஷ்ணா" என கேட்டான் சகாதேவன். இந்த கேள்வியால் கொஞ்சம் திகைத்து போன கண்ணன், "போரை நிறுத்துவது கடினம் இல்லையா? என்ன இப்படி கேட்கிறாய்" என சகாதேவனிடம் கேட்டார்.  அதற்கு பதிலளித்த சகாதேவன், "ஆமா கண்ணா. நான்கு விஷயங்கள் செய்தால் போதும் போரை நிறுத்தி விடலாம்" என்றார்.


அது என்ன நான்கு விஷயங்கள் என மிகவும் ஆர்வமாக கேட்டார் கிருஷ்ணர். அதன் சகாதேவன், முதலாவதாக இந்த ராஜ்ஜியத்தை கர்ணனிடம் கொடுத்து விடலாம். இரண்டாவது அர்ஜூனை கொன்று விடலாம். மூன்றாவதாக திரெளபதியின் கூந்தலை வெட்டி விடலாம். நான்காவதாக உன்னை ஒரு இடத்தில் கட்டிப் போட்டு விடலாம். பிரச்சனை அனைத்திற்கும் காரணமான இவற்றை செய்து விட்டாலே போரை நிறுத்தி விடலாம் என்றார்.


இதை கேட்டு சற்று அமைதியான கண்ணன், நீ சொல்வது சரி தான். இருந்தாலும் இவற்றை எல்லாம் செய்வது அவ்வளவு சுலபம் என நினைக்கிறாயா? இவற்றில் முதல் மூன்றை கூட கஷ்டப்பட்டு எப்படியாவது செய்வது விடலாம். கடைசியாக என்னை கட்டிப் போட வேண்டும் என்றாயே. அது உன்னால் முடியுமா ? என் தாய் யசோதையாலேயே அது முடியவில்லை. உன்னால் எப்படியும் என கேட்டு படியே 11,000 கிருஷ்ணர்களாக உருவெடுத்தார். முடிந்தால் இப்போது கட்டு பார்க்கலாம் என்றார் கண்ணன் சிரித்த படியே.


கிருஷ்ணரின் இந்த பேச்சைக் கேட்டு அலட்டிக் கொள்ளாமல், குழப்பம் இல்லாமல் அதே இடத்தில் கிருஷ்ணரின் காலடியே அப்படியே அமர்ந்தான் சகாதேவன். கண்களை மூடி தனது மனதில் கிருஷ்ணரின் உருவத்தை கொண்டு வந்தான். அந்த உருவத்தை அப்படியே தனது பக்தியால் கட்டிப் போட்டான். சகாதேவனின் இந்த செயலால் பகவான் கிருஷ்ணன் அப்படியே அசந்து போனார்.


சகாதேவன், உன்னிடம் மட்டும் ஒரு ரகசியத்தை சொல்கிறேன் கேள். நான் வந்ததே இந்த போரை நடத்துவதற்காக தான். பாரத போரை நடத்தி முடிப்பது தான் என் அவதாரத்தின் நோக்கமே. அதை நடக்க விடு. தயவு செய்து உன் பக்தி என்னும் கட்டில் இருந்து என்னை விடுவித்து விடு என தனது அவதாரத்தின் ரகசியத்தை சகாதேவனிடம் முன்பே சொல்லி விட்டு தான் போருக்கான வேலைகளில் இறங்கி உள்ளார் கிருஷ்ணர்.