"சட்டவிரோதம்.. இம்ரான் கானை விடுதலை பண்ணுங்க".. பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி!

Aadmika
May 12, 2023,10:56 AM IST
இஸ்லாமாபாத் : கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும் படி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு அவரின் கைது சட்ட விரோதமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

70 வயதாகும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரைணக்கு ஆஜராகும் படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இம்ரான் கான் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டிற்கு வந்தார் இம்ரான் கான்.



ஐகோர்ட் வாசலில் வைத்து ராணுவ படையினரும், பாகிஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு படையினரும் சுற்றி வளைத்து இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இதனால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராவல்பெண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தையும் அடித்து நொறுக்கினர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக வெடித்தது. 

பாகிஸ்தானில் மட்டுமின்றி லண்டன், அமெரிக்காவில் உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் உலகின் பல நாடுகளிலும் போராட்டம் பரவியது. பாகிஸ்தானில் கலவரம், போராட்டம் நடக்கும் இடங்களில் சேட்டிலைட் வரைபடமும் வெளியிடப்பட்டு, பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் தேசிய தணிக்கை பிரிவின் காவலில் வைக்கப்பட்டிருந்த இம்ரான் கான் தன்னை விடுதலை செய்யும் படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேசிய ஊழல் தடுப்பு பிரிவு படையினர் தன்னை கழிவறையை கூட பயன்படுத்த விடாமல் சித்ரவதை செய்வதாகவும், மெதுவாக மாரடைப்பு வரவழைக்கக் கூடிய ஊசியை போட்டுக் கொள்ளும் படி தன்னை கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி உமர் அட் பண்டியல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்தது. 

விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யுங்கள். பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு பிரிவு படை இம்ரான் கானை கைது செய்தது சட்ட விரோதமானது. இந்த கைது நடவடிக்கையால் நாடே வன்முறை, போராட்டங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டிற்கு ஆஜராக வந்த அவரை எதற்காக கைது செய்ய வேண்டும்?

நாளை காலை 10 மணிக்குள் இம்ரான் கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டிற்கு அழைத்து வர வேண்டும். மற்றவற்றை ஐகோர்ட் முடிவு செய்யும். அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மட்டுமே அவரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும். பதிவாளரின் அனுமதி பெறாமல் ஒருவரை கைது செய்ய முடியாது. ஒரு தனி நபர் கோர்ட்டில் சரணடைய வந்தால் அவரை கைது செய்தால் என்ன அர்த்தம் ? என ஊழல் தடுப்பு படைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையே,  இம்ரான் கான் ராணுவ கஸ்டடியில் இருந்தபோது அவரை லத்தியால் அடித்ததாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.