நாளைய வாக்காளர்களே.. அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் படிங்க.. விஜய் அழைப்பு!

Su.tha Arivalagan
Jun 17, 2023,11:36 AM IST
சென்னை: நாளைய வாக்காளர்களான  இன்றைய மாணவ, மாணவியரே உங்களது படிப்புடன், அம்பேத்கர், பெரியார், காமராஜரையும் படிங்க.. நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க என்று நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் 10, 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசளித்துக் கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.



இதில் கலந்து கொண்டு விஜய் உரையாற்றினார். பின்னர் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் அவர் தனது கைகளால் பரிசுகளை வழங்கினார். பிளஸ்டூவில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று அசத்திய மாணவி நந்தினிக்கு அவர் வைர நெக்லெஸ் கொடுத்து கவுரவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:

நான் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் நிறையப் பங்கேற்றிருக்கிறேன். இதுபோன்ற விழாவில் பங்கேற்பது இதுதான் முதல் முறை. கூடுதல் ��ொறுப்புணர்ச்சி வந்திருப்பதாக உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை சந்திப்பது சந்தோஷம். உன்னில் என்னைக் காண்கிறேன் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது எனக்கு என்னோட ஸ்கூல் டேஸ் நினைவுக்கு வருகிறது. 



நான் உங்களை மாதிரியெல்லாம் பிரைட் ஸ்டூடன்ட் இல்லை. ஆவரேஜ் ஸ்டூடண்ட்தான். ஜஸ்ட் பாஸ்தான்.  அப்படி ஆவேன் இப்படி  ஆவேன் என்றெல்லாம் நான் கனவு கண்டேன்னு சொல்ல மாட்டேன். எனது கனவெல்லாம் சினிமாதான். அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருந்தேன்.  ஒரு வேளை.. அது எதுக்கு அதை விடுங்க..  

படிப்பு முக்கியம்

இந்த விழா ஏற்பாடு செய்ய முக்கியக் காரணம் ஒரு படத்தில் ஒரு வசனம் வந்தது. காடு இருந்தா எடுத்துக்குவான். சொத்து இருந்தா பறிச்சுக்குவான்.. படிப்பை மட்டும்தான் உனிடமிருந்து எடுத்துக்கவே முடியாது.. இது என்னை பாதிச்ச லைன்ஸ். நூற்றுக்கு நூற உண்மை. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என்னிடமிருந்த ஏதாவது செய்ய விரும்பினேன். அதற்கான நேரம்தான் இது.  இதுக்காக உழைச்ச ஆசிரியர்கள், உங்களை அடையாளம் கண்ட மக்கள் இயக்க நண்பர்களுக்கும் ஆனந்த் அண்ணாவுக்கும் நன்றி.. 

இலவசமாக கிடைப்பது அட்வைஸ்தான். அது உங்களுக்கு சுத்தமா பிடிக்காதுன்னு தெரியும். படி படி படிப்பு படிப்பு.. இது ரெண்டைத் தாண்டி எதைப் பேசுறதுன்னு தெரியலை.. எனக்குப் பிடிச்ச சிலதை சொல்றேன். பிடிச்சா எடுத்துக்கங்க. இல்லாட்டி விட்ருங்க.

குணத்தை இழந்து விடாதீங்க

முழுமையான கல்வி எது.. ஸ்கூலுக்குப் போறோம், காலேஜ் போகிறோம்..  படிக்கிறோம் டிகிரி வாங்குகிறோம்.. அது மட்டுமே முழுமையான கல்வி ஆகி விடாது என்று ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார். நான் பள்ளி கல்லூரியில் படித்ததெல்லாம் மறந்த பிறகு எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் நாம் கற்றுக் கொண்ட கல்வி.  பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி, மேத்ஸ் இப்படி படித்ததையெல்லாம்  நீக்கி விட்டு எது மிஞ்சியிருக்கும்.. நம்மோட கேரக்டர், சிந்திக்கும் திறமை. படிக்க வேண்டும், பரீட்சை, கிரேட்ஸ் மார்க்ஸ் எல்லாம் முக்கியம்தான். ஆனால் கேரக்டர், சிந்திக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். பணத்தை இழந்தால் எதையும் இழக்கலைன்னு அர்த்தம்.. ஆரோக்கியம் இவந்தால் எதையோ  இழந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.. குணத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விட்டீர்கள் என்று அர்த்தம். 

இதுவரை உங்கள் வீட்டிலிருந்து படித்தீர்கள்.. அம்மா அப்பாவுடன் இருந்தீர்கள்.. இனி வேறு வேறு ஊர்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்குப் போகப் போகிறீர்கள். வேறு ஒரு வாழ்க்கைக்குப் போகிறீர்கள்.. அங்கு ஒரு சுதந்திரம் கிடைக்கும் பாருங்க.. அதை சரியா பயன்படுத்திக் கொண்டு, சுய ஒழுக்கத்துடன் சுய அடையாளத்தை விட்டுக் கொடுத்து விடாமல் இருக்க வேண்டும். 

நம்ம வாழ்க்கை நம்ம கையில்தான்



வாட்ஸ் ஆப், இன்ஸ்டா, ஷேர்சாட என எங்கு பார்த்தாலும்.. போலி செய்திகள்தான்.. ஒரு சிலருக்கு மறைமுக திட்டம் இருக்கும். ஏதாவது கவர்ச்சிகரமான விஷயத்தைப் பயன்படுத்தி நமது கவனத்தை ஈர்க்கலாம் என்று சிலர் நினைப்பார்கள். நீங்கதான் எதை எடுக்கணும், எதைத் தவிர்க்கணும், எது உண்ம�� எது பொய் என்பதை நீங்கதான் முடிவெடுக்க வேண்டும்.  முடிஞ்சவரைக்கும் படிங்க. தலைவர்களைப் பற்றித் தெரிஞ்சுக்கங்க.. அம்பேத்கர், பெரியார் காமராஜர் போன்றோரைப் படிங்க.. நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக்கங்க. மற்றதை விட்டுருங்க. இதுதான் உங்களுக்கான டேக்ஹோம் மேசெஜே.

உன்னோட நண்பனைச் சொல்லு உன்னைப் பத்தி நான் சொல்றேன்னு சொல்வாங்க.. அது இப்ப இல்லை.. 
எந்த சோசியல் மீடியா பேஜை பாலோ பண்றேன்னு சொல்லு நான் உன்னைப் பத்தி சொல்றேன். அப்படித்தான் இப்ப ஆயிருச்சு.

நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க

நீங்கதான் நாளைய வாக்காளர்கள். நல்ல நல்ல தலவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நம்ம விரலை வச்சு நம்ம கண்ணைக் குத்திக்கிறதப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா.. இதுதான் இப்ப நடந்துட்டிருக்கு. காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதுதான் அது.  ஒரு வேட்பாளர் 15 கோடி செலவிடுகிறார் என்றால் அதற்கு முன்பு அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப்பார்னு யோசிங்க. இதையெல்லாம் கல்வித் திட்டத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோரிடம் போய், இனி காசு வாங்கிட்டு ஓட்டுப் போடாதீங்கன்னு சொல்லுங்க. சும்மா டிரை பண்ணிப் பாருங்க அடுத்தடுத்து வாக்களிக்கப் போற வாக்காளர்கள் நீங்க.  இது நடக்கும்போதுதான் கல்வி முறையே முழுமை அடைஞ்சதா அர்த்தம்.



வகுப்பிலோ, அல்லது உங்க தெருவிலோ வெற்றி பெறாத மாணவர்கள் இருப்பாங்க.. அவர்களுடன் நேரம் ஒதுக்குங்க. தைரியம் கொடுங்க.  வெற்றி பெறுவது சுலபம் என்பதை எடுத்து சொல்லுங்க. அவர்கள் அடுத்த தேர்வில் வெற்றி அடைந்தால் அது நீங்க எனக்குக் கொடுக்கும் பரிசாகும். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. தோல்வி அடைந்தவர்கள் சீக்கிரம் வெற்றி பெற வாழ்த்துகள்.

தைரியமா நினைத்ததை முடிவெடுத்து செல்லுங்க.. டிஸ்கரேஜ் செய்ய ஒரு கூடடம் இருக்கும். முடியாது சரியில்லை ஓடாது என்று சொல்வார்கள். அதை எடுத்துக்காதீங்க.. உனக்குள்ள ஒருத்தன் இருப்பான், ஒருத்தி இருப்பா .. அவன் அவள் சொல்வதை மட்டும்  கேளுங்க.. அவ்வளவுதான்.

வளர்ப்போம் கல்வி வளர்க என் குட்டி நண்பா நண்பீஸ்... என்று பேசி முடித்தார் விஜய்.