ராசிபுரம் திமுக கவுன்சிலர் தேவிப்பிரியா குடும்பத்துடன் தற்கொலை

Su.tha Arivalagan
Jul 12, 2023,12:43 PM IST
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் தேவிப்பிரியா தனது கணவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் நகராட்சியின் 13வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தவர் தேவிப்பிரியா. 45 வயதாகும் இவரது கணவர் பெயர் அருண்லால். இவர் திமுக நகர செயலாளராக இருந்து வந்தார். நகைக்கடையும் நடத்தி வந்தார். இவர்களுக்கு  18 வயதில் மோனிஷா என்ற மகள் உள்ளார்.




இந்த மூன்று பேரும் இன்று காலை தங்களது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். கணவனும் மனைவியும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளனர். மகள் மோனிஷா விஷம் குடித்து இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மூன்று பேரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

அருண்லால் தனது வியாபாரத்திற்காக பெருமளவில் கடன் வாங்கியிருந்ததாக ஒரு தகவல் உலா வருகிறது. கடனை அடைக்க முடியாமல் மனைவி, மகளுடன் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில்தான் கோவையில் டிஐஜி விஜயக்குமார் தற்கொலை செய்த சம்பவம் கொங்கு மண்டலப் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக கவுன்சிலர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.