ஜூலை 20ல் ராஜ்யசபா கூடுகிறது.. ஆகஸ்ட் 11ம் தேதி வரை.. அனல் பறக்கும்!

Su.tha Arivalagan
Jul 02, 2023,03:27 PM IST
டெல்லி: ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ஜூலை 20ம் தேதி ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும். இந்தக் கூட்டத் தொடரை அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பான முறையில் கூட்டத் தொடர் நடைபெறுவதை அனைத்துக் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

23 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 28ம் தேதிதான் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

அரசுத் தரப்பு ஆக்கப்பூர்வமான முறையில் கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் கூட எதிர்க்கட்சிகள் கை நிறைய பிரச்சினைகளுடன் காத்திருக்கின்றன. எனவே கூட்டத் தொடர் எந்த அளவுக்கு முழுமையாக நடைபெறும் என்பது ஜூலை 20ம் தேதிக்குப் பிறகுதான் தெரியும்.