திருமாவளவனாக மாறிய அசோக் கெலாட்.. மைக்கைத் தூக்கி வீசி கோபம்!

Su.tha Arivalagan
Jun 04, 2023,12:37 PM IST
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சரியாக மைக் வேலை பார்க்காத கோபத்தில் அதைத் தூக்கி எறிந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கூட்டத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியபோது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அவர் அந்த மைக்கைத் தூக்கி வீசி கோபப்பட்டார். அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

பார்மர் நகருக்கு சென்றிருந்தார் அசோக் கெலாட். அங்குள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த அவரைப் பார்க்க பெண்கள் பெரும் திரளாக திரண்டு வந்திருந்தனர். அவர்களிடம் அரசுத் திட்டங்கள் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தார் அசோக் கெலாட். அவரது இருக்கைக்கு அருகில் மாவட்ட கலெக்டர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அசோக் கெலாட் கையில் இருந்த மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அவர் அந்த மைக்கை கலெக்டர் இருந்த பக்கமாக தூக்கி எறிந்தார். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.




பின்னர் வேறு ஒரு மைக் முதல்வரிடம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ பரவி வைரலானது. மாவட்ட ஆட்சித் தலைவரை நோக்கி முதல்வர் அசோக் கெலாட் மைக்கை தூக்கி எறிந்ததாக பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். ஆனால் முதல்வர் அலுவலகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் மாவட்ட ஆட்சித் தலைவரை நோக்கி மைக்கை எறியவில்லை. சாதாரணமாகத்தான் அவர் தூக்கிப் போட்டார் என்று விளக்கம் அளித்துள்ளது முதல்வர் அலுவலகம்.

ஆனால் மைக் எறிந்ததுடன் விவகாரம் முடியவில்லை. முதல்வரிடம் பெண்கள் கூட்டம் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு கசமுசவான சத்தமாக இருந்ததால். இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் சத்தம் போட்டவர்களை அங்கிருந்து அகற்றக் கூறினார்.. "எங்கே எஸ்பி.. இங்கே எஸ்பியும், கலெக்டரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்று அவர் கோபத்துடன் கூறவே அதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது.