Yellow Alert: தண்ணீரில் மிதக்கும் பெங்களுரு.. இன்னும் 6 நாட்களுக்கு மழை இருக்காம்

Aadmika
May 23, 2023,11:43 AM IST
பெங்களுரு : பெங்களுருவில் பெய்து வரும் தொடர் மழையால் நகரமே நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களுருவிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

பெங்களுருவில் ஞாயிற்றுக்கிழமை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டதால் 22 வயது ஐடி பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். பல இடங்களில் மரங்கள் வேருடன் பிடுங்கி எரியப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.



இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெங்களுருவில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை தொடரும். மே 27 வரை மழை தொடரும். வங்கக் கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் மழை அளவு அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி வரும் மழையை எதிர்கொள்ள மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டும். தேடையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்கள் வீடுகளுக்குள்ளே தங்கி இருக்கவும், கனமழை பெய்யும் போது வாகனங்கள் ஓட்ட வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. சாலைகளில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடந்த சில நாட்களாக 30 டிகிரி செல்சியசிற்கும் மேலாக அதிகரித்து வந்த வெப்பநிலைக்கு நிவாரணமாக இந்த மழை இருக்கும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், இப்படி ஒரு பேய் மழை பெய்து வருவதால் பொது மக்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.