அடேங்கப்பா... என்னா ஓட்டம்.. ஒரே ஆண்டில் ரயில்வே வருமானம் 25% அதிகரிப்பு

Aadmika
Apr 19, 2023,09:26 AM IST
புதுடில்லி : 2022-2023 ம் நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை ரூ.2.4 லட்சம் கோடியை வருமானமாக பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டை வித 25 சதவீதம் அதிகமாகும்.

ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அறிக்கையின் படி, மார்ச் 31 ம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவாக பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக 61 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு, ரூ.63,300 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பென்சன் தொகையை முழுவதுமாக தரும் அளவிற்கு ரயில்வே துறையின் வருவாய் திருப்திகரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் மிகப் பெரிய பொது சேவை துறையான ரயில்வே துறையில் கடந்த சில ஆண்டுகளாக பல புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே துறை மூலமாக சுற்றுலா வளர்ச்சி துறை இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய சுற்றுலா திட்டங்களால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரயில்வே துறையில் ஒரே ஆண்டில் அதன் வருவாய் 25 சதவீதம் உயரும் அளவிற்கு உருவாகி உள்ளது.

இந்திய பண்பாடு, பாரம்பரிய மிக்க வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க ரயில்வே துறை சார்பில் பாரத் கவுரவ் திட்டம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆன்மிக சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் இயக்கப்பட்ட 6 ரயில்கள் மூலம் மட்டும் ரூ.6.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது.