ராகுல் காந்திக்கு பாஸ்போர்ட் கிடைத்தது.. நாளை அமெரிக்கா பயணம்
May 28, 2023,04:02 PM IST
டெல்லி: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு 3 வருட காலம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
வழக்கமான பாஸ்போர்ட்டுகள் 10 வருடம் வரை செல்லுபடியாகக் கூடியவையாகும். ஆனால் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில் தான் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதால் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்திருந்தார் ராகுல் காந்தி.
ஆனால் ராகுல் காந்திக்கு பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என்று பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி ஆட்சேபனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி வைபவ் மேத்தா, ராகுல் காந்திக்கு 3 வருட காலம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி நாளை அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு வாஷிங்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் இந்திய அமெரிக்கர்களுடனான சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க எம்.பிக்களையும் ராகுல் காந்தி சந்திக்கவுள்ளார்.