பாகிஸ்தானில் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும்.. பஞ்சாப் கவர்னர் பேச்சு!

Su.tha Arivalagan
Jun 09, 2023,12:02 PM IST
அமிர்தசரஸ்:  பாகிஸ்தானில் மீண்டும் ஒரு முறையோ அல்லது 2 முறையே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். இந்தியாவுக்குள் தொடர்ந்து போதைப் பொருளை ஊடுறுவ வைத்து வரும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் புரோஹித் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பஞ்சாப் போலீஸார் தங்களது ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக தொடர்ந்து பெருமளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். பாகிஸ்தானிலிருந்துதான் இந்தப் போதைப் பொருட்கள் உள்ளே ஊடுறுவுகின்றன.



இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 2 நாள் பயணமாக எல்லைப் புற மாவட்டங்களுக்கு வந்திருந்தார். அமிர்தசரஸ் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைச் சீண்டி வருகிறது. இப்படியே விட்டு வைத்தால் ஒரு தலைமுறையே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடும். பாகிஸ்தானில் ஒன்று அல்லது 2 சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். அந்த நாட்டுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், உளவு பிரிவு, பஞ்சாப் போலீஸார் ஆகியோர் ஒருங்கிணைந்த முறையில் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.  இவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் போதைப் பொருட்கள் பறிமுதல் சிறப்பாக நடந்து வருகிறது.

இந்தியாவுடன் நேரடியாக மோத பயந்து கொண்டு இப்படி முறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தான்.  ஏராளமான டிரோன்களை எல்லைக்குள் ஊடுறுவ வைத்து அதன் மூலம் போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்துகிறது. பாகிஸ்தான் அரசு அல்லது அந்த நாட்டு ராணுவத்தின் உதவி இல்லாமல் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றார் அவர்.