ஜனாதிபதி திரெளபதி முர்முவின் முதல் தமிழக வருகை : மதுரையில் 2 நாட்கள் ட்ரோன்களுக்குத் தடை
Feb 16, 2023,10:11 AM IST
மதுரை : ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வர உள்ளார். இதனை முன்னிட்டு மதுரையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவையில் நடைபெற இருக்கும் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிப்ரவரி 18 ம் தேதியன்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வர உள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து, பகல் 12 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு மதுரையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மதுரையில் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, கோவை செல்லும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளார். பிறகு மீண்டும் பிப்ரவரி 19 ம் தேதி தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு செல்ல உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.