ஜனாதிபதிதான் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும்.. ராகுல் காந்தி
May 22, 2023,01:27 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அல்ல, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகம் 90 ஆண்டுகளைக் கடந்து விட்ட மிகப் பழமையான கட்டடமாகும். இதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றம் அதி நவீனமாக பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்டதைத் தொடர்ந்து மே 28ம் தேதி அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். வீர சவர்க்கரின் பிறந்த நாளன்று இந்த திறப்பு விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக் கூடாது. மாறாக, குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.