"பெரியாரைப் படியுங்கள்".. விஜய்க்கு அரசியல் தலைவர்கள் அதிரடி ஆதரவு

Su.tha Arivalagan
Jun 17, 2023,04:54 PM IST
சென்னை: அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் படியுங்கள் என்று மாணவ மாணவியருக்கு அறிவுரை கூறியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் நடிகர் விஜய்யின் மக்கள் மன்றம் சார்பில் பத்தாவது மற்றும் பிளஸ்டூவில் சட்டசபைத் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு இன்று பரிசுகள் வழங்கி விஜய் கவுரவித்தார்.



நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மாணவ, மாணவியர் பாடங்களைப் படிக்க வேண்டும். கூடவே அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களையும் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது இந்த பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் விஜய் பேச்சு குறித்துக் கேட்டபோது, நல்ல விஷயத்தைத்தானே சொல்லியுள்ளார். வரவேற்க வேண்டியதுதான் என்று கருத்துத் தெரிவித்தார். இதேபோல மேலும் பல தலைவர்களும் விஜய்யின் பேச்சை வரவேற்றுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்கிரமன் கூறுகையில்,  அண்ணன் விஜய்க்கு காலம் கனியட்டும்! சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நாளைய தலைமுறைகளிடம் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜரை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என கூறி அண்ணன் 
நடிகர் விஜய்  அவர்கள் அனைவரின் மனங்களிலும் மிக உயர்ந்த இடத்தை பிடித்துவிட்டார். அவரது நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் கூறுகையில், பாடப் புத்தகங்களைத் தாண்டியும் படிக்கவேண்டும். அம்பேத்கர்,பெரியார், காமராஜர் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள நடிகர் விஜய்  அவர்களைப் பாராட்டுகிறேன். சோஷியல் மீடியாவில் பரப்பப்படும் ஃபேக் நியூஸ் குறித்த அவரது எச்சரிக்கையும் நன்று என்று பாராட்டியுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி விடுத்துள்ள ட்வீட்டில்,  தமிழ்நாட்டில்  கல்வியை பொதுவாக்க போராடிய தந்தை பெரியாரையும்! அரசியல் சட்டத்தில் கல்வி உரிமை கொடுத்த அண்ணல் அம்பேத்காரையும்! 
சனாதன சங்கீகளின் குலக்கல்வி திட்டம் ஒழித்து பள்ளி கல்வியை தந்த காமராஜரையும்! படியுங்கள் என்று நடிகர் விஜய்  பேசியது சரிதான். 

உயர் கல்வியை எல்லோருக்கும் பரவலாக்கிய பேரறிஞர் அண்ணாவையும்,கலைஞரையும் சேர்த்து படிப்போம்!

தற்போது தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை கெடுத்து,தடுத்து கொண்டு இருக்கும் மோடியின் சதித்திட்டத்தினையும் வீழ்த்துவோம்! என்று கூறியுள்ளார். பல்வேறு திரைத்துறையினரும் கூட விஜய்யின் பேச்சுக்காக அவரைப் பாராட்டி வருகின்றனர்.