செந்தில் பாலாஜி நீக்கத்தை நிறுத்தி வைத்த கவர்னர் உத்தரவை எதிர்த்து வழக்கு

Aadmika
Jul 01, 2023,12:01 PM IST
சென்னை : அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக தமிழக கவர்னர் ரவி இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து வழக்கு விசாரணை முறையாக நடக்காது என்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக கவர்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு என்றால் தேர்தல் எதற்கு என திமுக.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கேள்வி எழுப்பி இருந்தது. கவர்னரின் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது.



இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்பப் பெறுவதாக கவர்னர் மாளிகை தெரிவித்தது. செந்தில் பாலாஜியின் நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி நீக்கத்தை திரும்ப பெற்ற கவர்னரின் உத்தரவை  எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,அரசியல் சாசனத்தின்படி எடுத்த முடிவை கவர்னர் மறுபரிசீலனை செய்ய முடியாது. கவர்னர் தனது முடிவு பற்றி ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை என வழக்கறிஞர் ரவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது.