திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் : இன்று விரதமிருந்தால் விரைவில் டும் டும் டும்
Apr 05, 2023,11:07 AM IST
சென்னை : தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. பங்குனி மாதம், பெளர்ணமி, உத்திரம் நட்சத்திரம் இந்த மூன்றும் இணைந்த நாளை பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். மற்ற மாதங்களில் வரும் பெளர்ணமியை விட பங்குனி மாத பெளர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு.
இந்த நாளில் முருகன் - தெய்வாணை, சிவன் - பார்வதி, ராமர் - சீதை, பெருமாள் - ஆண்டாள் ஆகிய தெய்வ திருமணங்கள் நடைபெற்ற நாள் பங்குனி உத்திரம் தான். மகாலட்சுமி அவதரித்த தினம் இந்த நாளில் தான். தமிழ் மாதங்களில் நன்னிரண்டாவது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாள் என்பதால் இது மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.
திருமணம் ஆகாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து, முருகனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அரசு வேலை கிடைக்க வேண்டும் என முயற்சி செய்பவர்கள், அரசு சார்ந்த உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், பதவி உயர்விற்காக காத்திருப்பவர்களும் இந்த நாளில் விரதம் இருக்கலாம். அதிகாலையில் எழுந்து விளக்கேற்றி, விரதத்தை துவக்க வேண்டும்.
திருமணத்திற்காக விரதம் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல், பாயசம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். அரசு வேலை கிடைக்க வேண்டும் என வழிபடுபவர்கள் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். திருமணம் ஆகாதவர்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு போன்ற மங்கல பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுத்து, ஆசி பெறலாம்.
பங்குனி உத்திர நாளில் புனித நீராடுவதும், தானங்கள் செய்வதும், வழிபாடு செய்வதும் பல மடங்கு உயர்வான பலன்களை அள்ளி தரும். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.