ஜனவரி 27 ல் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

Aadmika
Jan 18, 2023,09:09 AM IST

திண்டுக்கல் : பஞ்சாமிர்தத்திற்கு புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், முருகனின் மூன்றாவது படைவீடாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 27 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 


கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மலைக்கோவிலான தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள ஆன்லைனில் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என பழனி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி கோவில் இணையதளம் மூலம் முதலில் முன்பதிவு செய்யும் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கும்பாபிஷேக டிக்கெட் பெறுவதற்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 18 ம் தேதி துவங்கி, ஜனவரி 20 ம் தேதி வரையிலான மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும். கும்பாபிஷேக டிக்கெட்டிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றில் ஏதாவது ஆவணத்துடன், மொபைல் போன் எண் மற்றும் இமெயில் முகவரியை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


முன்பதிவு செய்த பக்தர்கள் படி வழியாக மட்டுமே மலைக் கோவிலுக்கு செல்ல முடியும். கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை மற்றும் இ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பழனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


பழனி முருகன் கோவில் மூலவர் சிலை, நவபாஷாணத்தால் ஆனது. அகத்தியர் அளித்த மருந்துகளால் நோய்கள் குணமான நிலையில், போகர் அளித்த நவபாஷாண மருந்துகளால் பலர் உயிரிழந்தனர். இதனால் நவபாஷாணங்களைக் கொண்டு முருகன் சிலை ஒன்றை செய்தார் போகர். இந்த சிலைக்கு இரவு முழுவதும் சந்தன காப்பு போடப்பட்டிருக்கும். காலையில் சந்தன காப்பு களையப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இந்த நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிர்தமும் மருந்தாகவே கருதப்படுகிறது.