தெரியுமா உங்களுக்கு... பழனி முருகன் சிலைக்கு தினமும் வியர்க்கும் அதிசயம்!
Jan 28, 2023,11:09 AM IST
திண்டுக்கல் : புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் இருக்கும் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. இது போகர் சித்தரால் தயாரிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சிலையும் சரி, பழனி மலையும் சரியும் மனித சக்திக்கு எட்டாத பல அதிசயங்களைக் கொண்டது.
பழனி முருகன் கோவில் மூலவர் சிலை நவபாஷாணம் மட்டுமல்ல 4000 க்கும் அதிகமான மூலிகைகளால் செய்யப்பட்டது. அதனால் தான் இந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் சகல விதமான நோய்களையும் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இந்த முருகன் சிலையை செய்த போகர் சித்தர் இன்றும் இந்த மலையில் உள்ள ஒரு குகையில் தவம் செய்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த முருகன் சிலையை போகர் தனது கைகளாலேயே பல வித மூலிகைகளை கலந்து, 9 ஆண்டுகள் பாடுபட்டு செய்து முடித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த சிலையில் முகம், கை, கால்,மூக்கு போன்ற உடல் பாகங்கள், கைதேர்ந்த ஸ்பதியால் உளி கொண்டு செதுக்கியது போல் ஒளி பொருந்தியதாக காட்சி அளிப்பது அதிசயம்.
தமிழகத்தில் முருகன் சிலைக்கு வியர்க்கும் அதிசயம் இரண்டு கோவில்களில் தான் நடக்கிறது. ஒன்று சிக்கலில் உள்ள சண்முகநாதர் கோவில். இங்கு கந்தசஷ்டி விழாவில், முருகன் போருக்கு புறப்படுவதற்கு முன் தாய் பராசக்தியிடம் சக்திவேல் வாங்கும் போது, கோபம், ஆவேசம் காரணமாக முருகனின் சிலைக்கு வியர்க்கும் அதிசயம் இப்போதும் நிகழ்கிறது. இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்.
ஆனால் பழனி முருகன் கோவிலில் இந்த அதிசயம் தினமும் நடக்கிறது. மூலவர் தண்டாயுதபாணி சிலை எப்போதும் உஷ்ணத்துடனேயே காணப்படும். இரவு நேரத்தில் ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகனுக்கு மார்பில் சந்தன காப்பு சாத்தப்படும். நெற்றியிலும் சிறிய சந்தன பொட்டு வைக்கப்படும். காலையில் நடை திறக்கும் போது முருகனின் சிலை வியர்வையுடன் காணப்படும். இந்த துளிகளை தண்ணீரில் கலந்து காலை முதல் கால பூஜையின் போது அங்கு இருப்பவர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.
இந்த தீர்த்தம், இரவு முழுவதும் முருகனின் மார்பில் சாத்தப்படும் சந்தனம் ஆகிய இரண்டும் தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்ததாகும். இவற்றை நம்பிக்கையுடன் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான நோயாக இருந்தாலும் தீர்ந்து விடும் என்பது பலரும் அனுபவித்தில் கண்ட உண்மையாக உள்ளது.