பாகிஸ்தானில் பரிதாபம்.. ஒரு லிட்டர் பால் ரூ.210.. சிக்கன் ரூ.780.. தவிக்கும் மக்கள்!
Feb 15, 2023,12:24 PM IST
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த நாட்டில் ஒரு லிட்டர் பால் ரூ.210 க்கும், ஒரு கிலோ சிக்கன் ரூ.780 க்கும், எலும்பு இல்லாத கறி ரூ.1100 வரை விற்பனையாகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் விலை அனைத்தும் விண்ணை தொடும் அளவிற்கு தாறு மாறாக எகிறி உள்ளன. கடந்த சில நாட்களாக யாரும் எதிர்பாராத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
பணவீக்கம் காரணமாக 170 பில்லியன் ரூபாய் அளவிற்கு அந்நாடு புதிய வரிகளை விதித்ததே இந்த திடீர் விலை ஏற்றத்திற்கும், பொருளாதார நெருக்கடி நிலைக்கும் காரணம் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தானிற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை அந்நாடு பின்பற்றாததால் 2019 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட வேண்டிய 6 பில்லியன் டாலர்களை ஒதுக்கும் முடிவை சர்வதேச நாணய நிதியம் ஒத்திவைத்தது. இதுதான் பாகிஸ்தானின் இந்த மோசமான நிலைக்கு காரணம்.
ஏற்கனவே 2022 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்த வெள்ள பெருக்கில் 1739 பேர் உயிரிழந்தனர், 2 மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதற்கிடையில் பயங்கரவாத வன்முறைகள் வேறு தலைதூக்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திண்டாடி வருகிறது.