"நாங்க போறோம்ப்பா"..  நாடாளுமன்ற திறப்பு விழாவில் பாமக பங்கேற்பு

Aadmika
May 27, 2023,09:45 AM IST

சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பல்வேறு அரசியல் கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்து வரும் நிலையில் பாமக கலந்து கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமஸ் அறிவித்துள்ளார்.

டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதம் நரேந்திர மோடி மே 28 ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறப்பதற்கு பதில், பிரதமர் திறப்பதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது ஜனாதிபதியையும் நாட்டு மக்களையும், பழங்குடியின சமூகத்தையும் அவமதிப்பது போலாகும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.



ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கட்டப்படும் புதிய சட்டசபை கட்டிடத்திற்கு கவர்னரை வைத்து அடிக்கல் நாட்டுவதற்கு பதிலாக, ஏன் அம்மாநில முதல்வர்களே அடிக்கல் நாட்டுகிறார்கள் என பாஜக.,வும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் கேள்வி எழுப்பி உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவால் புதிய அரசியல் சர்ச்சை கிளம்பி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. தேசியஅளவிலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணிக்கின்றன. மொத்தம் 19 கட்சிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிலையில் பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ், திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும். டில்லியில் வரும் 28 ஆம் நாள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.