ஜப்பானில் மகாத்மா காந்தி சிலை திறப்பு.. பிரதமர் கிஷிடாவுடன் மோடி சந்திப்பு

Su.tha Arivalagan
May 20, 2023,02:28 PM IST

ஹிரோஷிமோ: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் முகாமிட்டுள்ள பிரதமர் நரேந்தி மோடி அங்கு மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைத்தார். மேலும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.


ஜி7 மாநாட்டையொட்டியும், குவாத் மாநாட்டையொட்டியும் ஜப்பான் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 3 நாட்களுக்கு அவர் அங்கு இருப்பார். இந்த பயணத்தின் முக்கிய பகுதியாக மகாத்மா காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 




பின்னர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் குறித்து பொதுவாக பேசப்பட்டது. இந்தியா - ஜப்பான் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து இரு தலைவர்களும் உறுதி எடுத்துக் கொண்டனர்.


இதுதொடர்பாக வெளியுறவத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்கி வெளியிட்டுள்ள டிவீட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜப்பான் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாகவும், ஆக்கப்பூர்வாகவும் இருந்தது.  பிராந்திய வளர்ச்சி குறித்தும் இந்தியா பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். உலகளாவிய சவால்களை சந்திக்க ஜி7 மற்றும் ஜி 20 நாட்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.


ஜி20 அமைப்பின் தலைவராக தற்போது இந்தியா உள்ளது. அதேபோல ஜி7 அமைப்பின் தலைவராக ஜப்பான் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தென் கொரிய அதிபருடன் சந்திப்பு


இதேபோல தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோலுடனும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு உறவுகள் குறித்து அப்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் அவர் பாபுவா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.