புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டது.. லோக்சபாவில் செங்கோல் நிறுவப்பட்டது
டெல்லி: டெல்லியில் புதிதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம் இன்று இந்து சம்பிரதாயப்படி பூஜை போட்டு திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.
888 லோக்சபா உறுப்பினர்கள் அமரக் கூடிய பிரமாண்ட லோக்சபா கட்டடம், 300 உறுப்பினர்கள் அமரக் கூடிய வகையிலான பிரமாண்ட ராஜ்யசபாக கூடம் உள்ளிட்ட பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட நாடாளுமன்றக் கட்டடம் சென்டிரஸ் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
இந்த நவீன நாடாளுமன்ற வளாகத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முன்னதாக காலை ஏழரை மணியளவில் புதிய நாடாளுமன்றத் திறப்புக்கு முன்னர் இந்து சம்பிரதாய முறைப்படி பூஜை நடத்தப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தங்க செங்கோல்
யாகத்துடன் கூடிய அந்த பூஜைக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியிடம் தர்மபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு சைவ ஆதீன மடாதிபதிகள் தங்கசெங்கோலை வழங்கினர். அந்த செங்கோலை பயபக்தியுடன் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, பின்னர் தரையில் விழுந்து செங்கோலை சாஷ்டாங்கமாக வணங்கினார். அதைத் தொடர்ந்து ஆதீனங்கள் புடை சூழ லோக்சபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, செங்கோலை ஏந்தியபடி சென்றார். அவருடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் சென்றார்.
லோக்சபாவில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை வைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கொண்டு செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. அப்போது தேவாரம் பாடப்பட்டது, வேத மந்திரங்கள முழங்கப்பட்டன, மங்கல இசை ஒலிக்கப்பட்டது. வழக்கமாக நாடாளுமன்ற நிகழ்வுகளில் ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே முழங்கும். ஆனால் இம்முறை தமிழும் தமிழ் இசையும் இணைந்து கலந்து ஒலித்தது வித்தியாசமாக இருந்தது. அதைத் தொடர்ந்து அருகில் இருந்த குத்துவிளக்கை ஏற்றி வைத்து வணங்கினார்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பாராட்டு
இந்த நிகழ்வுக்குப் பின்னர் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களைச் சந்தித்தார் பிரதமர். அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து அவர்களுடன் உரையாடினார். அவர்களுக்கு சால்வையும் போராத்தி கெளரவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தோர் அதில் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர். பிரார்த்தனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து ரூ. 75 நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். நாடாளுமன்ற வரலாறு குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டன. இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.
தற்போது உள்ள நாடாளுமன்றக் கட்டடம் 1927ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டது. 96 வயதாகியும் கூட இன்று வரை அது வலுவாக உள்ளது. மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய அந்தக் கட்டடம் பழையதாகி விட்டதால் புதிய கட்டடம் கட்ட பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து 64,500 சதுர அடி பரப்பளவில் முக்கோண வடிவிலான நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் பணி தொடங்கியது. கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட அந்தப் பணிகள் முட��வடைந்தன. இதையடுத்து புதிய நாடாளுமன்றம் இன்று திறக்கப்பட்டது.
இந்த கட்டடத்தில் 888 உறுப்பினர்கள் அமரக் கூடிய வகையிலான லோக்சபா கூடமும், 300 பேர் அமரக் கூடிய வகையிலான ராஜ்யசபா அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுக் கூட்டம் நடைபெறும் கூடத்தில் 1280 எம்.பிக்கள் அமர முடியும்.
Video - புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி
இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது. அதாவது கட்டுமானப் பொருட்கள் பலவும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வாங்கப்பட்டு கட்டடம் உருவாகியுள்ளது. மொத்த கட்டுமானப் பணிகளையும் டாடா குழுமத்தின் டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் செய்துள்ளது.