புதிய சாதனைக்குத் தயாராகும் பிரதமர் மோடி.. அதுவும் அமெரிக்காவில்!

Su.tha Arivalagan
Jun 07, 2023,04:58 PM IST
டெல்லி: அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் சபையில் 2 முறை பேசிய முதல் இந்தியப் பிரதமர் என்ற புதிய சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைக்கவுள்ளார்.

ஜூன் 22ம் தேதி  பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையிலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அவருக்கு அன்று அதிபர் ஜோ பைடன் இரவு விருந்து அளித்துக் கெளரவிக்கிறார்.



அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளது இது இரண்டாவது முறையாகும்.  ஏற்கனவே 2016ம் ஆண்டு ஒருமுறை அவர் உரை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்க காங்கிரஸில் இந்தியப் பிரதமர் ஒருவர் 2 முறை உரை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் மோடியின் சாதனைப் பட்டியலில் இதுவும் சேருகிறது.

காங்கிரஸ் சபையில் தன்னைப் பேச அழைப்பு விடுத்ததற்காக அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, செனட் மெஜாரிட்டி தலைவர் சக் ஷூமர், செனட் குடியரசுக் கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல், ஹவுஸ் ஜனநாயக தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து டிவீட் போட்டுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையில் உலகத் தலைவர்கள் பெரும்பாலும் 2 முறை உரை நிகழ்த்தியதில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு மட்டுமே  அதிக முறை உரை நிகழ்த்தியுள்ளார். அவர் 3 முறை உரையாற்றியுள்ளார். அவருக்கு அடுத்த உலகத் தலைவராக மோடி 2வது முறை உரையாற்றவுள்ளார்.