3 நாடுகள்.. 6 நாள் சூறாவளி பயணம்.. 40 என்கேஜ்மென்ட்.. பிரதமர் மோடி செம பிசி!

Su.tha Arivalagan
May 19, 2023,09:56 AM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளில் 6 நாள் பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார்.

ஜப்பான், பாபுவா நியூகினி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிரதமர் நரேந்திரமோடி 6 நாட்கள் சுற்றுப்பணம் செய்யவுள்ளார். குவாத் மாநாடு, ஜி7 மாநாடு மற்றும் இந்தியா பசிபித் தீவுகளின் கூட்டமைப்பு மாநாடு ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

3 நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய பிரதமர் மோடி, 24க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இரு தரப்பு சந்திப்புகளும் இதில் அடங்கும். கிட்டத்தட்ட 40 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.



முதல் கட்டமாக மே 19 முதல் 21ம் தேதி வரை ஹிரோஷிமாவில் நடைபெறும் வருடாந்திர ஜி7 மாநாட்டில் பிரதமர் நோடி கலந்து கொள்கிறார். பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அதில் பேசவுள்ளார். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பேசவுள்ளார்.

ஹிரோஷிமா  பயணத்தின்போது அங்கு மகாத்மா காந்தியடிகளின் மார்பளவுச் சிலையையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார். ஹிரோஷிமா பயணத்தின்போது பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பையும் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் இருதரப்பு சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு மே 22ம் தேதி பாபுவா நியூ கினிக்குச் செல்கிறார். அங்கு இந்தியா பசிபிக் தீவுகள் கூட்டமைப்பின் 3வது மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதில் பாபுவா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மரபே பங்கேற்கிறார்.

கடைசியாக மே 23ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் பேசுகிறார். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து அப்போது ஆஸ்திரேலியா பிரதமருடன் விவாதிக்கவுள்ளார். இந்தியர்கள் சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.