450 தொகுதிகளில் பொது வேட்பாளர்... பாஜக காலி.. ப.சிதம்பரம் யோசனை
May 30, 2023,03:51 PM IST
சென்னை: நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் பாஜக தோல்வி அடையும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறங்கியுள்ளன. காங்கிரஸ் தலைமையில் அணி திரள பல கட்சிகள் ஆரம்பத்தில் யோசித்து வந்தன. ஆனால் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தற்போது பலரையும் காங்கிரஸ் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒருயோசனையைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், என்னைப் பொறுத்தவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து 450 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் அந்த இடங்களில் பாஜக நிச்சயம் தோல்வி அடையும்.
இது எனது ஆசைதான். ஜூன் 12ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூடிப் பேசவுள்ளன. அப்போது இதுகுறித்தும் விவாதிக்கலாம். வேலைகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து நடக்கும். நிறைய அவகாசம் உள்ளது. சற்று காலம் பிடிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் ப.சிதம்பரம்.
சிவசேனா ஆதரவு
ப.சிதம்பரத்தின் இந்த யோசனை குறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ப.சிதம்பரம் சொல்லியுள்ளது முற்றிலும் உண்மையாகும். இதுதொடர்பாக பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் ராவத்.