ரூ. 2000 நோட்டு ஒழிப்பு நடவடிக்கை.. பாஜகவின் நோக்கத்தில் சந்தேகம்.. ப.சிதம்பரம் தாக்கு
May 22, 2023,11:15 AM IST
டெல்லி: ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற எந்த அடையாள அட்டையும் தேவையில்லை, விண்ணப்பங்கள் தேவையில்லை, அத்தாட்சி தேவையில்லை என்று மத்தியஅரசு சொல்வதால் இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்:
ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற எந்தவிதமான அடையாள அட்டையும் தேவையில்லை. பாரங்களை பூர்த்தி செய்து தரத் தேவையில்லை. ஆதாரம் எதையும் காட்டத் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது ரூ. 2000 நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரலாம் என்ற பாஜகவின் வாதமே அடிபட்டுப் போகிறது.
சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. 2016ம் ஆண்டு அது அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்திலேயே அதை மக்கள் புறக்கணித்து விட்டனர். அந்தப் பணத்தை வைத்து எதையும் செய்ய முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்து விட்டது. உண்மையில் அது அவர்களுக்குப் பயன்படவில்லை.
அப்படியானால்.. ரூ. 2000 நோட்டுக்களை யார் வைத்திருந்தார், யார் பயன்படுத்தினார்கள்.. உங்களுக்கே விடை தெரியும். கருப்புப் பணத்தை வைத்திருந்தோர் மட்டுமே இந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்கள். அவர்களுக்குத்தான் இது உதவியாக இருந்தது. இப்போது ரூ. 2000 நோட்டுக்களை வைத்திருந்தோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அரசே வரவேற்கிறது. அவர்கள் தங்களது பணத்தை தாராளமாக வெள்ளையாக மாற்றிக் கொள்ளலாம்.