ஆன்லைன் ரம்மி தடை மசோதா... மீண்டும் நிறைவற்றிய சட்டசபை.. என்ன முடிவெடுப்பார் ஆளுநர்

Aadmika
Mar 23, 2023,02:43 PM IST
சென்னை : ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தமிழக கவர்னர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி இருந்தார்.  இந்நிலையில் இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் தாக்கல் செய்தார். கவர்னர் திருப்பி அனுப்பி கடிதத்தில் இடம்பெற்ற விபரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கவர்னர் திருப்பி அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சட்ட ஒழுங்கு மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த மசோதாவிற்கு அனைவரும் ஆதரவு அளிக்கும் படி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். ஏற்கனவே அனுப்பிய மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதால் புதிதாகய மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.