23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்... மீண்டும் மீண்டும் வரலாறு படைக்கும் ஜோகோவிக்!

Su.tha Arivalagan
Jun 12, 2023,11:33 AM IST

பாரீஸ்: பிரெஞ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிக். இது அவர் வெல்லும் 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

இதன் மூலம் நடால் படைத்திருந்த 22 கிராண்ட்ஸ்லாம் சாதனையை அவர் முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  

டென்னிஸ் ஓபன் எரா காலத்தில்  23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜோகோவிக்.  ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஜோகோவிக் மோதினர். இப்போட்டியில், 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிக் வெற்றி பெற்றார். 



ஒட்டுமொத்த டென்னிஸ் உலகில் தற்போது அதிக அளவிலான சிங்கிள்ஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர்கள் இருவர்தான். அது செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிக். இருவரும் தலா 23 பட்டங்களை வென்று சம நிலையில் உள்ளனர்.

ஜோகோவிக்குக்கு இது 34வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி என்பதும் முக்கியமானது. இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடிக்கவுள்ளார். இதுதவிர இன்னொரு பெருமையும் ஜோகோவிக்குக்குக் கிடைத்துள்ளது. அது ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் (மொத்தம் 4 கிராண்ட்ஸ்லாம் - அமெரிக்கன் ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் - போட்டிகள் உள்ளன) பட்டத்தையும் தலா 3 முறை அவர் வென்று அசத்தியுள்ளார்.

இன்னொரு விசேஷம் என்னவென்றால் அவரது 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 30 வயதைத் தாண்டிய பிறகு அவருக்குக் கிடைத்தவை என்பதுதான். இதன் மூலம் வயதையும் அவர் முறியடித்துள்ளார். தற்போது ஜோகோவிக்குக்கு 36 வயதாகிறது. பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை அதிக வயதில் வென்ற வீரரும் இவர்தான்.  இதிலும் அவர் நடாலை வீழ்த்தியுள்ளார்.