பிரபல வில்லன் நடிகர் கசன் கான் மாரடைப்பால் மரணம்!

Aadmika
Jun 13, 2023,09:15 AM IST
திருவனந்தபுரம் : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகரான கசன் கான், மாரடைப்பால் காலமானார். அவரது சொந்த மாநிலமான கேரளாவில் அவர் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட கசன் கான், தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சேதுபதி ஐபிஎஸ், முறைமாமன், மேட்டுக்குடி, வல்லரசு, உள்ளத்தை அள்ளித் தா, மாப்பிள்ளை கவுண்டர், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமானவளே உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.



கசன் கான் மாரடைப்பால் காலமான தகவலை மலையாள பட தயாரிப்பாளரான என்.எம்.பாதுஷா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். 

மலையாளத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட தமிழ் சினிமாதான் அவருக்கு மிகப் பெரிய பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பாக விஜயகாந்த் படங்கள்.  நடிகர் கசன் கான், 1992 ம் ஆண்டு செந்தமிழ் பாட்டு என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு கன்னடம், மலையாள மொழிகளில் பல படங்களில் வில்லனாக நடித்து, பிரபலமானார். 

விஜய், விஜயகாந்த், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக 2015 ம் ஆண்டு லைலா ஓ லைலா என்ற மலையாள படத்தில் தர்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக 2008 ம் ஆண்டு பட்டய கிளப்பு படத்தில் நடித்திருந்தார். 

மலையாளத்தில் கந்தர்வா, சிஐடி மூசா, தி கிங், ட்ரீம்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கசன் கானின் திடீர் மறைவுக்கு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு பிரபல நடிகர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் காமெடியன்கள் மயில்சாமி, மனோபாலா, குணச்சித்திர நடிகர் சரத் பாபு என தமிழ்ப் பிரபலங்கள் மரமணடைந்தனர். இந்த வரிசையில் வில்லன் நடிகர் கசன்கான் தற்போது இணைந்துள்ளார்.