கிண்டி மருத்துவமனை.. ஜனாதிபதி வருவதில் குழப்பம்.. முதல்வரே திறக்கிறார்.. பாஜக பாய்ச்சல்!

Aadmika
Jun 10, 2023,09:34 AM IST
சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள புதிய அரசு மருத்துவமனையை  ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு பதில் தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

சென்னை கிண்டியில் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 15 ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய மருத்துவமனையை ஜனாதிபதி திரெளபதி முர்மு திறந்து வைப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது.



ஜூன் 4ம் தேதி ஜனாதிபதி வந்து திறந்து வைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. மருத்துவமனை திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரில் போய் அழைப்பும் வைத்து விட்டு வந்தார். ஆனால் செர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் புறப்பட்டு போய் விட்டதால், ஜூன் 15ம் தேதி திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும் அந்தத் தேதியைத் தருவது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வைத்தே மருத்துவமனையை திறப்பது என்று தற்போது முடிவாகி வருகிற ஜூன் 15ம் தேதி ஸ்டாலினே மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கூட குடியரசுத் தலைவர் இந்த விழாவில் பங்கேற்க தயக்கம் காட்டியிருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையே, குடியரசுத் தலைவரை அழைத்து விட்டு தற்போது முதல்வரே மருத்துவமனையை திறப்பது குறித்து பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் இந்த கட்டிடத்தை திறந்து வைத்ததை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய திறப்பு விழாவை புறக்கணித்தன. இதற்கு பாஜக தரப்பில் எவ்வளவோ விளக்கம் அளித்தும் எதிர்க்கட்சிகள் பாஜக அரசை குற்றம்சாட்டி வந்தன. தற்போது ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் முடிவதற்குள் அவசரமாக திமுக அரசு மருத்துவமனையை முதல்வர் திறக்க உள்ளதை பாஜக கேள்வி கேட்டு வருகிறது.