ரூ.15 க்கு பெட்ரோல் வேண்டுமா ? ....கட்காரி கொடுக்கும் சூப்பர் ஐடியா

Aadmika
Jul 05, 2023,02:10 PM IST

பிரதாப்கர் : இந்தியாவில் ரூ.15 க்க பெட்ரோல் கிடைக்க வேண்டும் என்றால் 60 சதவீதம் எத்தனால் மற்றும் 40 சதவீதம் மின்சாரத்தால் ஆன வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, விவசாயிகளை மனதில் வைத்தே எங்களின் அரசு ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து வருகிறது. விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை கொண்டு 60 சதவீதம் வாகனங்கள் இயக்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.15 க்கு கிடைக்கும் அளவிற்கு விலை குறைந்து விடும். சுற்றுச்சூழல் மாசுபாடு, இறக்குமதி அனைத்தும் குறைந்து விடும்.



பெட்ரோல் இறக்குமதிக்காக செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடிகள் விவசாயிகளின் குடும்பங்களுக்கு செல்லும் என்றார். விரைவில் முழுவதுமாக எத்தனாலை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என சமீபத்தில் நாக்பூர் நடந்த கூட்டத்திலும் கட்காரி பேசி உள்ளார். இது தொடர்பாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன தலைவரிடமும் பேசி உள்ளதாகவும், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வது பற்றியும் அவர் பேசி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

100 சதவீதம் எத்தனாலால் இயக்கும் வாகனங்களை பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனால் விலை குறைவு தான். ஒரு லிட்டர் எத்தனால் ரூ.60 தான். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120 க்கு விற்கப்படுகிறது. அதோடு மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் போது எரிபொருக்காக செலவிடப்படும் தொகை குறையும் எனவும் கட்காரி தெரிவித்துள்ளார்.