புயலைக் கிளப்பிய "பார்பி".. வியட்நாமைத் தொடர்ந்து.. பிலிப்பைன்ஸ் நாடும் தடை!
Jul 06, 2023,10:00 AM IST
லாஸ் ஏஞ்சலெஸ்: புயலைக் கிளப்பியுள்ள பார்பி படம் அடுத்தடுத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம்தான் பார்பி. மார்காட் ராபி, பார்பி வேடத்தில் நடித்துள்ளார். ரியான் காஸ்லிங் கென் கேரக்டரில் நடித்துள்ளார். கிரேட்டா கெர்விக் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்குக் காரணம் இப்படத்தில் "Nine-dash line" மேப் இடம் பெற்றிருப்பதே.
"Nine-dash line" என்பது தென் சீனக் கடலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு அருகே சீனா போட்ட எல்லைக் கோடாகும். இந்த மேப்பை மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக சர்வதேச கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்து தடை வாங்கி விட்டன. ஆனால் அந்தத் தீர்ப்பை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த சர்ச்சைக்குரிய மேப்பைத்தான் பார்பி படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் கோபமடைந்துள்ளன.முதல் நாடாக வியட்நாம் பா��்பி படத்தைத் தடை செய்தது.அடுத்து பிலிப்பைன்ஸும் தடை செய்கிறது. தடை செய்ய வேண்டாம் என்றும் திரையிட அனுமதிக்குமாறும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.