ஜூலை 18 ல் மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. பெங்களூருவில்!

Aadmika
Jul 12, 2023,01:04 PM IST
டெல்லி : பாஜக.,விற்கு எதிராக ஒன்று சேருவது தொடர்பாக தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் ஜூலை 18 ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்திற்கு முன் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி இரவு விருந்து அளிக்க உள்ளார். 




பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் 15 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அந்த கட்சி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அக்கட்சிகள் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு உடன்பாடு இல்லாத நிலையிலேயே தற்போது வரை இருந்து வருகிறது.

ஆனால் வரும் திங்கட்கிழமையன்று நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் புதிதாக 8 கட்சிகள் கலந்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மதிமுக, கொங்கு தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளன. இவற்றில் மதிமுக மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் 2014 ம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் வலுவாக அணி திரளும் எதிர்க்கட்சிகளை உடைக்கும் வேலை சூடுபிடித்துள்ள நிலையில் சற்றும் மனம் தளராமல், 2வது கூட்டத்தை எதிர்க்கட்சிகள் கூட்டியுள்ளன. அடுத்தடுத்து கூட்டங்கள் நடக்க நடக்க எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையை முறியடிக்க என்னெல்லாம் வேலைகள் நடக்கும் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

இதற்கிடையே, இக்கூட்டத்தில் கடந்த கூட்டத்தில் பங்கேற்காத 8 புதிய கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 24 கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய கட்சிகள் எவை என்ற விவரம் தெரியவில்லை.