ஜூபிடர் எல்லாம் ஜூஜுபி.. அதை விட பெரிய கிரகம் இருக்கு.. இந்தியர்கள் கண்டுபிடிப்பு!
May 31, 2023,12:19 PM IST
டெல்லி: ஜூபிடரை விட மிகப் பெரிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் இந்தியர்கள் என்பதுதான் விசேஷமே.
பூமியிலிருந்து 731 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த புதிய கிரகம் சுற்றி வருகிறது. அதன் சூரியனை இது 7.24 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பூமியைத் தாண்டி மனிதர்கள் இருக்கிறார்களா.. மனிதர்கள் வசிக்கக் கூடிய தகுதியுடன் வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆய்வு உலகம் முழுவதும் பல முக்கிய நாடுகளில் தொடர்ந்து வருகிறது. இதில் பல புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தண்ணீர் இருக்கிறதா, ஆக்சிஜன் இருக்கிறதா என்ற ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியல் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம், ஜூபிடர் கிரகத்தை விட 13 மடங்கு பெரிதாக உள்ளதாம்.
இந்தக் குழுவில் இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பரஸ் எனப்படும் அதி நவீன தொலை நோக்கி மூலம் இந்த கிரகத்தை அடையாளம் கண்டுள்ளனர். மெளன்ட் அபுவில் இந்த தொலைநோக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கழகம் கண்டுபிடித்துள்ள 3வது கிரகம் இது.