எலி பிடிக்க இத்தனை லட்சம் சம்பளமா?...போட்டி போட்டு விண்ணப்பிக்கும் அமெரிக்க இளைஞர்கள்

Baluchamy
Jun 20, 2023,08:49 AM IST

நியூயார்க் : அமெரிக்காவில் எலியை பிடிக்க ஆட்கள் தேவை என்றும், அதற்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி தற்போது இணையதளத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. 

உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி ஆட்குறைப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. இதனால் இளைஞர்கள் பிடித்த வேலைக்கு செல்ல முடியாமல் கிடைத்த வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வீட்டில் சும்மா இருக்கும் மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது. அதில், எலியை பிடிக்க ஆட்கள் தேவை என்றும், அதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 



அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி, நியூயார்க் நகரங்களில் எலிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக கூறப்படுகிறது. வீடுகள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், சூப்பர் மார்கெட்டுகள் உள்ளிட்ட பல இடங்களில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எலிகளின் எணிக்கையை குறைக்க வேறு வழி இல்லாமல் நியூயார்க் மேயர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எலிகளை கொன்று அப்புறப்படுத்த ஆட்கள் தேவை என்றும்,  அவர்களுக்கு ஆண்டிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேயரின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஐடி ஊழியர்களே பொறாமைப்படும் அளவிற்கு நியூயார்க் மேயரின் இந்த கவர்ச்சியான சம்பளம் பேக்கேஜ் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதேபோல் வேலைக்கு ஆட்கள் கிடைக்கும் வரை நியூயார்க் நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் பல எலியின் ஆட்டத்தை தீர்த்துக்கட்ட நாய் மற்றும் பூனைகளின் உதவியை நாடியுள்ளனர். பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளை பயன்படுத்தி சேட்டை பண்ணும் எலிகளை வேட்டையாட பயன்படுத்தி வருகின்றன.